உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

171


வாழ்க்கை நடத்திவந்தமையோடு தமிழ்த் தொண்டினை இயன்ற வரையில் புரிந்துவந்தமையும் தமிழ்நாடு என்றும் மறவாமல் போற்றத்தக்கதோர் அருஞ் செயலாகும்.

அவர்களுடைய தமிழ்த் தொண்டினை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்; அவ்விரண்டினுள், தம்பால் கல்வி பயின்ற சிறுவர்களுள் நுண்மதியும் ஆர்வமுமுடையவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை எத்தகைய ஊதியமும் பெறாமல் இலவசமாகக் கற்பித்து அன்னோரைத் தமிழ்ப் புலவராக்கியமை ஒன்று; பிறிதொன்று, தாம் வாழ்ந்துவந்த ஊர்களில் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவன்மீது அந்தாதி, மாலை, கலம்பகம், உலா, கோவை முதலியனவும் தலபுராணங்களும் பாடி யரங்கேற்றி யாண்டும் தெய்வமணங்கமழச் சமயத் தொண்டு புரிந்து வந்தமையேயாம். அப்புலவர் பெருமக்கள் ஊர்தோறும் நடத்திவந்த திண்னைப் பள்ளிக்கூடங்களும் குருகுலங் களுமே. அந்நியர் ஆட்சியில் தாழ்வுற்றிருந்த நம் தாய் மொழியைக் காப்பாற்றிவந்தன என்று உறுதியாகக் கூறலாம். நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்துகொண்டிருந்த பரம்பரைச் செல்வர்களும் பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர்களின் தன்னலமற்ற தொண்டினைப் போற்றி அன்னோரைப் புரந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பயனாக அரசாங்க உதவி பெற்ற ஆரம்பப் பள்ளிக் கூடங்கள் தோன்றிய காலத்தேதான் வீரசைவப் புலவர்கள் நடத்திவந்த பழைய பள்ளிக்கூடங்கள் மறைந்து போயின.

அப்பள்ளிக்கூடங்கள் மறைந்தபின்னர், தமிழறிஞர்களைக் கிராமங்களில் காண்பது அரிதாயிற்று. அங்கிருந்த இளைஞர்களுள் ஆர்வமுடையவர்கள், தமிழ்ப் புலமை பெறுவதற்கும் இடமில்லாமற் போயிற்று. பிறகு, ஆங்கிலமே முதல் மொழியாகக் கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் நம்நாட்டில் ஆங்காங்கு அரசாங்க வுதவிகொண்டு அமைக்கப் பெற்றன. அவற்றில் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கில மொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்திப் பட்டமும் பதவியும் பெற்றுத் தம் தாய்மொழியாகிய தமிழில் பற்றும்