உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170





30. வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு

நம் தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுத் தொண்டு புரிந்த பெருமக்களை ஆராயுங்கால், அவர்களுள் வீரசைவர் பலர் இருத்தலைக் காணலாம். எனவே, தமிழ் வளர்த்த பெருமையில் வீர சைவர்க்கும் பெரும் பங்குண்டு என்று ஐயமின்றிக் கூறலாம். கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் வேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் நம் தமிழகம் சற்றேறக்குறைய அறுநூறு ஆண்டுகள் வரையில் பிறமொழியாளர்களாகிய ஏதிலாரது ஆட்சிக்குள்ளாகி எல்லையற்ற துன்பங்களை நாளும் அனுபவித்து வந்தமையோடு தன் பெருமைகுன்றித் தாழ்ந்த நிலையிலும் இருந்தமை வரலாற்றாராய்ச்சியால் நன்கறியக் கிடக்கின்றது. அந்நியர் ஆட்சி நடை பெற்ற அக்காலப்பகுதியில் நம் தாய்மொழியாகிய தமிழ் அரசாங்க மொழியாக ஏற்றுக்கொள்ளப்படாமல் அவ்வயலாரது மொழியே அரசாங்க மொழியாக அமைந்து போயினமையால் தமிழ்மொழி ஆதரவற்ற நிலையை எய்தியது. எனவே, அதனைப் போற்றுவாரும் கற்பாரும் கற்பிப்பாரும் மிக மிகக் குறைந்து போயினர். அக்கொடிய காலங்களிலே இளம் பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்துக் கல்வி கற்பித்து வந்தவர்கள் ஊர்தோறும் வாழ்ந்துகொண்டிருந்த வீரசைவப் பெருமக்களாகிய பாலாசிரியன் மாரேயாவர். அவர்கள் எல்லோரும் சிறந்த தமிழ்ப்புலமையும் கடவுட்கொள்கையும் சீலமுமுடையவர்களாகத் திகழ்ந்தமையால் கிராமத்திலிருந்த செல்வர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் மதிக்கப் பெற்று இளம் பாலாசிரியர்களாக இனிது வாழ்ந்து வந்தனர். அன்னோர், தமிழ்மொழியோடு வாழ்க்கைக்கு இன்றியமையாத கணக்கு முதலியவற்றையும் இளஞ்சிறார்க்குக் கற்பித்து வந்தமை குறிப் பிடத்தக்கது. அவர்கள் உவாத்திமைத் தொழிலில் பேரூதியம் பெறுவதற்கு வாய்ப் பில்லாத அக்காலத்தில் தாம் பெற்றது கொண்டு அமைதியாகத் தூய

.