உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

169


ஆர்.கே. ஷண்முகம் செட்டியர் அவர்களும் பெருங் கொடை வள்ளல் டாக்டர் ராஜா ஸர்.எம். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் தமிழிசை இயக்கம் தொடங்கி அதனை யாண்டும் பரப்பினார்கள். அதன் வளர்ச்சியின் பொருட்டுப் பெரும் பொருள் சேர்த்து, சென்னைமாநகரில் தமிழிசைக் சங்கம் நிறுவினார்கள். அச்சங்கம், தமிழிசை எங்கும் பரவுமாறு பல்வகையானும் தொண்டாற்றி வருதலைத் தமிழ்நாடு நன்கறிந்துள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம். ஆகவே, கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் வீழ்ச்சி யடைந்த தமிழிசை, இவ்விருபதாம் நூற்றாண்டில் அப்பெரியோர் இருவரது பேரூக்கத் தாலும் உழைப்பாலும் புத்துயிர் பெற்று, சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நகரங்களிலும் ஒலித்துக் கொண்டிருப்பதைப் பலர் அறிவர். அதற்குறுதுணை யாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் ஆதரவினால் தமிழிசைப் பாடல்கள் தொகுதி தொகுதியாக வெளியிடப் பெற்று வருகின்றன. எனவே, தமிழிசை தமிழ் வேந்தர் ஆட்சியில் பெற்றிருந்த உயர்நிலையை விரைவில் எய்தும் என்பது திண்ணம்.

எல்லோரும் இனிய தமிழிசை கேட்ட கேட்டின்புறுமாறு அவ்வியக்கத்தைத் தோற்றுவித்த செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளலார்க்குத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையவர் ஆவர்; அவர்களது புகழ் ஞாயிறும் திங்களும் உள்ளவரையில் உலகில் நின்று நிலவுவதாக!