உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

175


அரசாண்டவனும் வீரசோழன், வீர நாராயணன் முதலான சிறப்புப் பெயர்களையுடையவனும் ஆகிய முதற் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் வெட்டப் பட்டதாகும். அதன் வடகரையில் கருந்திட்டைக்குடி என்னும் வைப்புத்தலமும் அதனருகில் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், தென்கரையில் தஞ்சை மாநகரின் வடமேற்குப் பகுதியாக வம்புலாஞ்சோலை[1] என்னும் வைணவத் திருப்பதியும் அமைந்திருத்தல் வடவாற்றின் இரு மருங்கிலும் சோலைகள் செறிந்து காண்போர் கண்களைக் கவரும் இயல்பினவாய்க் குளிர்ந்த நிழலைத்தந்து கொண்டிருக்கும். அவற்றின் இரு கரைகளிலும் இடையிடையே படித்துறைகளும் பிள்ளையார் கோயில்களும் மணம்புரியப் பெற்ற வேம்பும் அரசும் நிலைபெற்ற மேடைகளும் உண்டு. அவ்விடங்களில் எண்ணெய்தேய்த்துக் கொள்வோரும் நீராடுவோரும் உடையுலர்த்து வோரும் உடையணிவோரும் கடவுள் வழிபாடு புரிவோரும் ஆகப் பலர் தம்தம் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். ஆதலால் அப்பிரதேசங்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையில் ஆரவாரமுடையனவாகவே இருக்கும். அவ்வாற்றின் தென்கரை வழியாகவும் வடகரை வழியாகவும் மாலை நேரங்களில் சிலர் உடல் நலங்கருதி நெடுந்தூரம் சென்று வருவதுண்டு.

இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்குமுன், இளவேனிற் காலத் தொடக்கத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் முழுமதி தோன்றித் தன் குளிர்ந்த நிலவால் உலகை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவர் வடவாற்றின் தென்கரை வழியாக மேற்கே போய்க் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் வயது முதிர்ந்தவர்; தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், மராட்டி, இந்துஸ்தானி, இந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமை யுடையவர்; தருக்க நூல்களையும் வேதாந்த நூல் கலையும் நன்கு பயின்று சிறந்த பண்பும் சீலமும் உடையவராக அந்நாளில் விளங்கியவர்; வடமொழியிலும் இந்தியிலுமுள்ள சிறந்த வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளி-


  1. வடவாற்றின் தென்கரையிலமைந்த வம்புலாஞ்சோலை' என்ற திருக்கோயில், பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சியில் வெண்ணாற்றின் தென் கரையில் இடம்பெற்றுவிட்டது.