உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


இத்தொகுதி ஐம்பத்தைந்து செப்பேடுகளையுடையது. இது வலிமையுள்ள செப்பு வளையத்தில் கோக்கப் பெற்றிருப்பதோடு தாமரைப் பூ வடிவில் அமைந்த பீடத்தின் மேல் முதல் ராசேந்திர சோழனுடைய வட்ட வடிவமான அரசாங்க முத்திரையையும் உடையது; வடமொழிப்பகுதி, தமிழ்ப் பகுதியாகிய இரண்டு பகுதிகளைத் தன்னகத்துக் கொண்டது. இவற்றுள், முதலிலுள்ள வடமொழிப் பகுதி மிகச் சுருங்கியதும் அதன் பின்னுள்ள தமிழ்ப் பகுதி மிக விரிந்ததுமாகும். வடமொழிச் செப்பேடுகள் மூன்றுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றும் 16 1/2 அங்குல நீளமும் 9 1/2 அங்குல அகலமும் உடையது. எஞ்சிய தமிழ்ச் செப்பேடுகள் ஐம்பத்திரண்டினுள் முதல் இருபத்தொன்று 16 1/2 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையன; மற்றச் செப்பேடுகள் நீளத்திலும் அகலத்திலும் சிறிது குறைந்துள்ளன. இது, முதல் இராசேந்திர சோழன் கி.பி. 1020ல் சோழ கி.பி.1020ல் மண்டலத்தில் ஐம்பத்தோர் ஊர்களைத் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் ஒன்றாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேயமாக வழங்கிய நிகழ்ச்சியைத் தெரிவிப்பதாகும். இதில் அவ்வூர்களின் பெயர்களும், நான்கெல்லைகளும், விளை நிலங்களின் கணக்கும், அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லுங் காசும், அவற்றைப் பெறுதற்குரிய அந்தணர்களின் ஊர்களும் பெயர்களும் பங்குகளும், விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களிலிருந்து ஆண்டுதோறும் அன்னோர் பெறும் நெல் ஐம்பத்தோராயிரத் தைம்பது கலமும் காசு முப்பத்திரண்டரை யுமாகும் என்பது இதனால் நன்கறியக் கிடக்கின்றது.

பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கிய முதல் இராசேந்திர சோழன், இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை, இப்பெரு வேந்தன் தன் தாயிடத்தில் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும்.