உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

185

வேலிப்பருத்தி நங்கைத் தொடர்பும் நெறி திறம்பிய சறுக்கலேயானாலும் அது மிகச் சிறு செய்தி. மனமார் மேற்கொண்டதும் அல்ல. அதில் பெருங்கெடுதல் இருந்ததாகவும் கெஞ்சி எண்ணவில்லை. ஆயினும் இதில் கூடக் காரியம் மிஞ்சி விடுமுன் கட்டுப்பாடு செய்யாவிட்டால், அதுவும் ஏதாவது சிக்கலில் கொண்டு போய்விட்டுத் தன் புகழ் கெடுக்கக்கூடும் என்று அவன் நினைத்தான்.

யுகாவ் மறைவின் நாற்பதாவது நாளன்று கெஞ்சியின் ஆணைப்படி ஹியே மலை மீது ஹோக்கெய்டோ பள்ளியில் இரகசியமாக ஒரு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதன் திருவினைகள் மிக அகல்விரிவுடையவையாய் இருந்தன. அவற்றுக்கான எல்லாப் பொருள்களும் இளவரசன் பொருட்குவையிலிருந்தே அனுப்பித் தரப்பட்டன. சிறப்பு வழிபாட்டுக்காகச் சித்தம் செய்யப்பட்ட வழிபாட்டு ஏடுகள், திருப்படிவங்களின் ஒப்பனைகள்கூட மிகக் கவனத்துடன் செய்யப்பட்டன. சமயப்பற்று மிக்க கோரெமிட்சுவின் உடன் பிறந்தார் பொறுப்பிலேயே திருவினைகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. அவை அப்பழுக்கின்றிச் சரிவர நிறைவேறின.

அடுத்த படியாக, கெஞ்சியின் பழைய எழுத்தாசிரியரே வரவழைக்கப் பட்டிருந்தார். அவர் இலக்கியப் பேராசிரியர். கெஞ்சியின் பெரு விருப்புக்குரியவர். மாண்டவர்க்குரிய வழிபாட்டு வாசகம் எழுத அவரே கோரப்பட்டிருந்தார். 'என்னால் மிகுதியும் நேசிக்கப்பட்டு அணிமையில் காலமான, பெயர் குறிக்கப்படாத ஒருவர் ஆன்மாவை நான் அமித புத்தர்பிரான் திருவடிக்காப்புக்கு ஒப்படைக்கிறேன் என்று கூறுக' - இக்கோரிக்கையுடன், தானே வாசகம் எழுதி அப்பேராசிரியர் திருத்தத்துக்குச் சமர்ப்பித்தான். உணர்ச்சிகரமான அவ்வாசகங் களைக் கண்ட அப்பெருந்தகை அதில் திருத்த எதுவும் கிடையாது என்று அதை அப்படியே ஏற்றார். உண்மையில் அவ்வாசகங்கள் அவரை உருக்கின.

'இம்மறைவு இளவரசன் உள்ளத்தில் இத்தனை துயர் விளைக்கின்றதே? இதுயார் மறைவாய் இருக்கக்கூடும்' என்று அப்பெரியார் வியந்தார். ஏனெனில் கெஞ்சி இச்சமயம் எவ்வளவோ தன் துயரை மறைக்க முற்பட்டும், அவன் கண்களில் ததும்பிய கண்ணீர் அவனைக் காட்டிக் கொடுத்தது.