உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
95

அசைவு நினைவசைவுகளைப் பிடித்த படங்களின் ஒருதொகுதியை அவருக்குக் காட்டினராம். தான் அருமையாக வளர்த்த ஒரு பறவை இறந்து போக, அதனைப்பார்த்து அழுதுகொண்டிருந்த ஒரு சிறு பெண்ணை வைத்துப்பிடித்த படத்தில் அப் பறவையையும் குழந்தையையும் சூழ மனக் கலக்கத்தால் உண்டான வலை போல் விந்தையான ஒருவகை வடிவம் காணப்பட்டது. சடுதியிலே திடுக்கிடப் பண்ணப்பட்ட இரண்டு குழந்தைகளை வைத்துப் பிடித்த படத்திலே பொட்டுப் பொட்டாய்த் துடிதுடிக்கும் ஒரு வடிவம் தோன்றியது. தம்மைப் பழித்துப் பேசக்கேட்டவர் வெகுண்ட போது பிடித்த படத்தில் புள்ளிபோன்ற அல்லது அரை குறையான மணிகள் போன்ற வடிவங்கள் காணப்பட்டன. திருத்தியடைந்த ஒரு பூனையின் குறுகுறுத்த ஓசையினாலே மெல்லென நிறந்தோய்ந்த ஒரு மேகநிறந் தோன்றியது. இருண்ட ஓர் அறையிலே ஒருவரை வைத்து அவர் நெற்றிக்கு அருகே யாவது, மார்பு அல்லது கைக்கு அருகேயாவது பிடித்த ஒருவகையான மெல்லிய தகட்டிலே அவர் நினைவின் வடிவங்கள் பதிகின்றனவாம். “பிராண சத்தியானது களிமண் போல மிகவுங் குழைவான தன்மை யுடைய தாயிருக்கின்றது: ஆவேச உருவில் நிற்கும் கொற்றன் ஒருவனது கட்புலனாகாத கையினால் உருவாக்கப்பட்டாற்போல அத்துணை உயிர்க் கலையுள்ள வடிவங்களால் அது பதிவு கொள்ளப் பெறுகின்றது. சூக்கும வுடம்பில் நிற்பவர்களின் நினைவின் உருவங்களும், மனத் தோற்றத்தின் நிழற் படங்களுமான இவை நினைவை ஒருவழி நிறுத்தலால் உண்டாக்கப்படுகின்றன; இங்ஙனம் ஒர் உத்தியோகஸ்தர் ஒருகால் தமது கருத்தை ஒரு கழுகுவடிவின் மேல் நிறுத்தினார். உடனே அக் கழுகின் உயர்ந்த வடிவம் அம் மெல்லிய தகட்டிலே புலப்பட்டுத் தோன்றியது. மற்றொரு தகட்டில் ஒரு குதிரை முகத்தின் ஒருபக்கத்து நிழல் காணப்பட்டது.” என்று பாரடக் என்னும் அம் மகாபண்டிதர் கூறுகின்றார். தாம் வைத்திருக்கும் அம் மெல்லிய தகடுகளிலே சிற்சில சமயங்களில் முகங்கள் பல வந்து தோன்றுகின்றன என்றும், ஒருமுறை ஒரு தாயின் நினைவினால் ஓர் இறந்த குழந்தையின் வடிவம் தோன்றலாயிற்றென்றும், அவர் மாழிகின்றனர். ஒருகால் சூக்குமவுடம்பிற் சன்று பார்த்ததனால் பதிந்த ஓர் உருவத்தைப்பற்றிப் பின் வருமாறு அவர் கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/128&oldid=1623818" இலிருந்து மீள்விக்கப்பட்டது