உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178

❖ மறைமலையம் - 3 ❖

திருவருள் வெளியிலே இன்புற்று நடைபெறும். இங்ஙனந் திருவருள் வெளியிலே அறிவு நடைபெறுதலால், அவ்வறிவோடு கூடி நிகழாமல் வறிதேயிருக்கும் இப்பருவுடம்பிற்கு இன்பம் மிகுந்து இளைப்பாறுதல் உண்டாகும் என்றும், இத்தூக்கத்தில் உண்டாகும் இன்பத்திலும் மேலானது வேறில்லையென்றும் அறிந்துகொள்க; தூங்காமல் தூங்கும் இத்தூக்கத்தின் மேலான இன்பம் உண்டென்பது மேல் எடுத்துக்காட்டிய ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது' என்னுந் திருமொழியினால் நன்கு விளங்கும்.

முற்றத்துறந்த முனிவர்கள் உலகத்துப் பொருள்களில் எவ்வகைப் பற்றும் இல்லாமல் தம் அறிவை அகத்தே திருப்பி நுண்ணுடம்புகளின் வழியே அதனைக் கொண்டுபோய், அவ்வுடம்புகளோடு ஒற்றுமைப்பட்டு விளங்குந் திருவருள் வெளியிலே நிகழ விட்டுப், பேரின்பவுருவாய் இளைப்பாறிக் காண்டு தூங்கிக் கிடப்பர்கள்; இவர்கள் எவ்வளவு காலம் இங்ஙனம் அருட் டூக்கத்தில் இருந்தாலும், இவர்களின் பருவுடம்பு பசிநீர் வேட்கைகளாற் சிறிதும் வருந்தாததாய் இருந்தபடியே இருக்கும்.

அமெரிக்கா தேசத்தில் அறிதுயிலிற் பிறரைப் பழக்கும் ஆற்றல் வாய்ந்த அறிஞர் சிலர், சிலரை ஆழ்ந்த அறிதுயிலிற் போகச் செய்து அவரைப் பேழையுள் அடக்கம்பண்ணி நிலத்திற்குள் ஒரு கிழமை அல்லது ஒரு திங்கள் வரையிற் புதைத்துவைத்துப் பிறகு மேலே எடுத்து அவர்களை விழிப்பிக்கின்றார்கள்; அங்ஙனம் விழிப்பித்த பிறகு விழித்த அவர்கள் அவ்வாறு ஒரு கிழமை ஒரு திங்கள் வரையில் தாம் நிலத்துட் பிணம்போலப் புதைத்து வைக்கப்பட்டது பற்றிச் சிறிதுந் தமதுடலம் பழுதுபெறாமல் முன்னிருந்த நோய்களும் விலகப்பெற்றுச் செவ்வையாகவே உயிர்வாழ்ந்து வருகின்றார்கள்; இப்புதுமையை அமெரிக்கா நாட்டிற்குப் போனால் இன்றும் கண்ணெதிரே கண்டு தெளியலாம்.

இவ்வுண்மைகளால் அருள்வெளியில் தூங்கும் தூக்கத்தில் இப்பருவுடம்பு உரம்பெற்று விளங்குமேயன்றிச் சிறிதும் பழுது பெறாமல் எத்தனை காலமேனும் அவ்வாறே நிலைபெற நிற்கும். இருளில் நாம் நாடோறுந் தூங்குந் தூக்கமோ நீடித்திருப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/211&oldid=1624276" இலிருந்து மீள்விக்கப்பட்டது