உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
194

❖ மறைமலையம் - 3 ❖

பரிகாரங்களையுஞ் செய்துவரல் வேண்டும். இவ்வாறு செய்வதை விடுத்து இவர்க்கு வந்தநோய் தீருமோ தீராதோ என்று கவலையுற்றுக் கலங்கியழுது ஆற்றாமைப்படுதல் நோயுற்றவர்க்கு அந்நோயை மிகுதிப்படுத்துவதற்கே இடமாகுமல்லது வேறு நன்மையின்றாம். நோய் கொண்டவர்க்கு அருகேயிருந்து ஆற்றாமைப்படுதல் மிகவுந் தீங்கு பயப்பதேயாகும். ஏனென்றால் தம்பக்கத்தேயிருந்து ஆற்றாமைப்படுபவரை நோயாளிகள் பார்க்குந்தோறும் தாமும் ஆற்றாமைப் பட்டு மனங்கலங்குவர். மனங் கலங்கக் கலங்க உயிராற்றல் குறையும்; அது குறையவே நோய் பெருகி அவரைக் கடிதில் இறக்கச்செய்யும். ஆகையால் நோய்கொண்டவர் பக்கத்தே செல்வோர் அந்நோயின் கொடுமையை மிகுத்துப் பேசாமல், ‘இந்நோய் எம்மட்டு! இது நாளைக்கே இருந்தவிடமுந் தெரியாமல் மறைந்துபோகும்’ என்று என்று உள்ளக்கிளர்ச்சி உண்டாகும் வண்ணம் தீரத்தோடு பேசல்வேண்டும்; மகிழ்ச்சியினை விளைவிக்கும் இச்சொற்கள் செய்யும் நன்மையை மிக அரிய மருந்துகளும் செய்ய மாட்டா.

இங்ஙனமே முதுமைப்பருவம் வருங்காலத்து என் செய்வோம் என்னுங் கவலையையும் அறவே ஒழித்துவிடல் வேண்டும். நம்மால் இயன்றவரையில் நல்வழியிற் பொருள் தேட முயலல்வேண்டும். நம்முயற்சியினால் மிகுந்த பொருள் தொகுக்க ஏலாவிட்டால் கிடைத்தமட்டில் மன அமைதி பெறுதலே பெரிதும் விரும்பத்தக்கதாம். இதனைவிடுத்து ‘முதுமை வந்துவிடுமே, இப்போது நமக்குள்ள பொருள் போதாதோ’ என்று கவலைகொண்டு தம் அளவுக்கு மிஞ்சி அல்லும்பகலும் இடைவிடாது பொருள் ஈட்ட முயல்குவராயின், அதனால் அவர் உடம்பிலுள்ள கருவிகள் தேய்ந்து வலிகுறையத் தாம் திரட்டிய பொருளைத் தாம் நுகரும் முன்னரே இறந்துபோவர்.

இவ்வாறு தம்மளவுக்குமேல் முயன்று விரைவில் அழிந்தொழிந்தவர் பலர். பார்மின்! மரம் மரப்பொந்துகளில் வசிக்கும் பறவைகளும், காட்டிலும் மலையிலும் மலைக் குகைகளிலும் வசிக்கும் விலங்குகளும் நாளைக்கு என் செய்வோம் என்னுங் கவலையுடையனவாய் இருக்கின்றனவா? அவைகள் எல்லாம் தம் உயிர்வாழ் நாட்களை இனிது கழிக்கவில்லையா? எல்லா உயிர்களையும் வகுத்த இறைவன் அவைகட்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/227&oldid=1628264" இலிருந்து மீள்விக்கப்பட்டது