உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
193

உரிய மெய்ந்நெறி யாகும். ஏனெனில் மனங்கலங்குதற்கு உரிய நிகழ்ச்சிகள் வந்தகாலத்து அவற்றை ஒரு பொருட்படுத்தாமல் மனத்திட்பத்தோடு நிற்றல் பொதுவாக மனித இயல்புக்கு மேற்பட்ட தெய்வ இயல்பேயாகு மன்றோ? வாணிக நுட்பங்கள் எல்லாம் செவ்வையாகத் தெரிந்தவொருவன் மலிந்த ஓரிடத்தினின்று ஒரு சரக்கைத் தன் கப்பலில் ஏற்றுவித்து மிகுந்த விலைப்படும் வேறொரு நாட்டுக்கு அதனைத் தக்க காலத்தே அனுப்புவித்தான். இவன் செய்த இம்முயற்சியில் ஏதும் பழுதே இல்லை. கடலிற் செல்லும் இவனது கப்பல் இடையே எதிர்பாராது நேர்ந்த சூறைக்காற்றில் அகப்பட்டுக் கடலுள் அமிழ்ந்திப் போனதாயின் அதற்கு இவன் யாது செய்யமாட்டுவான்? தன் அறிவாற்றலுக்கு மேற்பட்டுத் தோன்றிய அந்நிகழ்ச்சி கடவுள் செயலால் ஆயதென எண்ணி மன அமைதி பெறுவனாயின் அவன் உலக வாழ்க்கையில் உழலுபவனாயினும் அவனே முற்றத்துறந்த முழுத்துறவியாவான்.

மேலும், தான் வாணிகஞ் செய்யத் துவங்குங்காலத்தும் இது நன்றாய் முடியுமோ தீதாய்முடியுமோ என்று ஐயமுற்றுக் கவலைப்படுவனாயின் அவன் அம்முயற்சியைச் செவ்வனே தொடங்கி நடத்த மாட்டாமல் இடை முறிந்துபோவன்! அல்லது அம்முயற்சியைத் தொடங்காமலே வறிது நாட்கழிப்பன். ஆகவே நன்முயற்சியைத் துவங்கி நடத்தும் ஒருவன் அம்முயற்சியாதாய் முடியுமோ என்று கலங்காதிருத்தலே பலவகையாலும் இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற்குரிய வழியாகும். இவ்வழியை நன்குணர்ந்த ஆங்கில அமெரிக்க வணிகர்கள் தாம் துவங்கி நடத்தும் பெரிய வணிகங்களிலெல்லாம் அவை பின் எவ்வாறாய் முடியுமோ என்பதைப் பற்றிச் சிறிதுஞ் சிந்தியாமல் தாம் செய்யும் முயற்சிகளை மட்டும் திருத்தமாகச் செய்கின்றார்களெனவும், அதனால் அவர்கள் மற்ற வணிகர்களைப் பார்க்கினும் மிகுந்த ஊதியத்தை அடைந்து பெரிய செல்வர்களாய் இனிது வாழ்கின்றார்களெனவும் தெரிகின்றோம்.

இங்ஙனமே தம்மவர் நோயால் வருந்தும்போது அவர் எவ்வாறாவரோ என்று கவலைப்பட்டுக் கலங்காமல் அவரை அன்புடன் பார்த்து ஆறுதலான சொற்களைச் சொல்லித் தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/226&oldid=1628262" இலிருந்து மீள்விக்கப்பட்டது