உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
192

❖ மறைமலையம் - 3 ❖

காற்றினாலும் மழையினாலும் உண்டாகும் மாறுதல்கள் கணக்கற்றன. சூரியர் சந்திரர் இயக்கங்களால் உண்டாகும் மாறுதல்களும் எண்ணிறந்தன. இவற்றையெல்லாம் மனிதன் தன் சிற்றறிவால் சிறிதேனும் மாற்றவல்லவனா? இல்லையே. அங்ஙனமிருக்க மனிதன் பின்வருவதைக் குறித்துக் கவலைப்பட்டு மாய்வது ஏன்? இவனுடைய ஆற்றலுக்கு அடங்கி நடவாத நிகழ்ச்சிகளைப்பற்றி இவன் கவலைப்பட்டு என்செய?

அப்படியானால் நாம் முயற்சி செய்வதற்கே இடம் இல்லாமல் வீணே நாட்கழிக்க வேண்டிவருமோயெனின்; அங்ஙனமன்று; தந்நன்மையின் பொருட்டும் பிறர் நன்மையின் பொருட்டும் ஒவ்வொருவரும் நன்முயற்சி செய்யவேண்டியது இன்றியமையாத கடமையேயாம்; என்றாலும் அம்முயற்சியினால் வரும்பயன் நன்றாகுமோ தீதாகுமோ என்று எண்ணி எண்ணி மனம் ஏங்குதல் சிறிதும் நலமுடைத்தன்று.

“எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு”

என்னும் திருவாக்கின்படி ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும்போதே அது தமக்கும் பிறர்க்கும் நன்றாமாறு வைத்து நன்றாய்ச் சிந்தித்துச் செவ்வனே முயலல்வேண்டும்; எடுத்துச்செய்த அந்நன்முயற்சியினால் இன்னது வருமோ வராதோ என்று ஐயமுற்றுக் கவலையடைதல் ஒன்றே யாரும் விரும்பற்பாலதன்றாம். அடுத்த நிமிடத்தில் வருவது இன்னதென்று நம்மால் உறுதிசெய்தல் அரிதாகலின் பின்னர் யாது வருமோ எனக் கருதி மனங் கலங்குதல் தக்கதன்று. தன் அறிவுக்கு எட்டிய அளவு தான்றொடங்கிய முயற்சியினால் இத்துணை நன்மைவரும் என்று செவ்வையாக முயன்று வந்தபின் தான் கருதியவாறாக நன்மையே வரும், அல்லது அவ்வாறின்றித் தான் எண்ணியதற்கு முற்றும் மாறானது வரினும் வரும்.

அவ்வாறு வந்தால் அதனை இவன் தன் குற்றமாக நினைந்து நெஞ்சம் புண்படுதல் ஆகாது. தன்னால் ஆகுமட்டும் நன்முயற்சியே செய்தவன் அம்முயற்சி பாழ்படக் கண்டால் அதனைத் தன் குற்றமென நினையாமல் அஃது ஊழ்வலியின் பான்மையென்றும் கடவுள் செயல் என்றும் உணர்ந்து மன அமைதிபெறுதலே தனது உயிர் ஆற்றலை மிகுதிப்படுத்துதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/225&oldid=1628261" இலிருந்து மீள்விக்கப்பட்டது