உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
195

படியளவாமல் விடுகின்றனனா? அருட்பெருங் கடலான ஆண்டவன் எல்லாவுயிர்களையுந்தான் குறித்த காலம் வரையிற் காப்பாற்ற இருக்கையில், மனிதர்கள் மட்டும் அவன் அருட்பெருந்தகைமையை நம்பாமல் தமக்குத் தம்மையே துணையாக நினைத்துக் கவலையுறுதல் என்னையோ! இதனால் ‘நாம் பொருள்தேடும் முயற்சியை விட்டிருக்கவேண்டுமென்பது கருத்தன்று. யானை முதல் எறும்பீறான உயிர் அத்தனைக்கும் படியளக்கும் ஐயன் என் முயற்சியை யறிந்து எனக்கும் படியளவாது போகான்’ என்று ஒவ்வொருவரும் உள்ளத்தில் உறுதிகொண்டு மகிழ்ந்து முயல்வராயின் அவர்கள் பன்னூறாண்டு பயன்பட இனிதுவாழ்வர்; அதனால் அவர் வாழ்க்கையிற் கவலைகளுந் துன்பங்களும் வினைகளும் சிறிதும் இல்லாமல் ஒழிந்துபோகும்.

இனித் தம்மனைவி மக்கள் முதலாயினாரிடத்து மிகவும் அன்புடன் ஒழுகி அவர்க்கு நல்லறிவுகளையும் அடிக்கடி புகட்டி நற்செய்கைகளிலும் அவர்களைப் பழகச்செய்துவந்தால் அவர்களைப்பற்றிச் சிறிதுங் கவலையடைய வேண்டுவதேயில்லை. ஒரு குடும்பத்திற் றலைவனாயிருப்பவன் எங்ஙனம் நற்குணத்தினும் நல்லொழுக்கத்தினும் மேம்பட்டுத் தோன்றுகின்றானோ, அங்ஙனமே அவனைச் சார்ந்தவர்களும் அவற்றில் மேம்பட்டுத் தோன்றுகின்றார்கள். அவன் நல்லவனும் நற்செய்கையுடையவனுமாய் இராவிட்டால் அவனைச் சார்ந்தவர்களும் அவனைப்போலவே ஆய்விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் முதல்வனாயிருப்பவன் திருடனாய் இருந்தால் அவன் மனைவி மக்களும் பெரும்பாலும் திருடர்களாகவே மாறிவிடுகிறார்கள். விலைமாதர் வீட்டுக்குச் செல்லுந் தந்தையரைப் பார்த்துத் தாமும் விலைமாதர் வீட்டுக்குச் சென்று கெட்ட புதல்வர்கள் எத்தனை பெயர்! கள்ளையுஞ் சாராயத்தையுங் குடித்துப் பெருங்குடியர்களான தந் தந்தைமாரைப் போலவே தாமுங் குடித்துக்கெட்ட பிள்ளைகள் எத்தனைபெயர்! வேட்டையாடிப் பறவைகளையும் விலங்கினங்களையுங்கொன்று அவற்றின் இறைச்சியை விழுங்கியும், பொய்யுரைத்தும், பிறரை வஞ்சித்தும், சூதாடியுந்திரியும் தகப்பன்மாரைப் பின்பற்றித் தாமும் அங்ஙனமே தீநெறியில் நடந்து கெட்ட இளைஞர்கள் எத்தனை பெயர்! எந்நேரமுங் கடுகடுத்த முகத்தோடும் வன்சொற்களோடும் தம் மனைவிமாரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/228&oldid=1628266" இலிருந்து மீள்விக்கப்பட்டது