உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196

❖ மறைமலையம் - 3 ❖

வைதும் அடித்துங்கொடுமை செய்து, அவர்கள் தம்மை வறுத்து அகன்றுபோய்ப் பிறரைச் சார்ந்தொழுகும்படி செய்யும் கணவன்மார்க்குங் கணக்குண்டோ? இங்ஙனமே தங் குடும்பத்திற் சேர்ந்தவர்களையெல்லாங் கெடுத்துக் கெட்ட வழியிற் புகுத்துவதற்கு அக்குடும்பத்திற் றலைவனாயிருப்பவன் தீக்குணமுந் தீச்செய்கையுமே காரணமாமன்றி மற்றென்னை? ஆகவே, குடும்ப முதல்வனாயிருப்பவன் தான் செவ்வையாக நடந்து காட்டுவனாயின் அவன் றன்னைச் சேர்ந்தவர் களெல்லோரும் தாமே நல்லவர்களாய் நடந்து நலம்படுவர்; அதன் பொருட்டு அவன் சிறிதுங் கவலையடைதல் வேண்டாம்.

இனி அச்சம் என்னுங் கொடுந்தீயுந் தன்னை வந்து பற்றாமற் செய்துகொள்ளவேண்டும்; அச்சம் உள்ளவனுக்குச் சிறிய காரியங்களுங் கைகூடுவதில்லை. மனவலிமையுள்ளவனுக்குப் பெரிய காரியங்களுங் கைகூடுகின்றன. அச்சம் உள்ளவனைக் கண்டு எல்லாரும் வெறுப்பு அடைகிறார்கள், தீரமுள்ள வனிடத்தில் எல்லாரும் விருப்பம் வைக்கிறார்கள். மனிதனிலுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட அச்சம் உள்ளவனைக் கண்டால் அவனுக்குத் தீங்குசெய்ய முந்துகின்றன; மனவலிமையுள்ளவனிடத்திலோ அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றன. குலைக்கிற நாய் ஓடுகிறவனைக் கண்டால் பின்னும் பின்னும் மிகுதியாய்க் குலைத்துக்கொண்டே அவனைப் பின்றொடர்ந்து கடிக்கப் போவதும், அதற்கு அஞ்சாமல் நின்று தன்னை உறுத்துப் பார்ப்பவனுக்குத்தான் அடங்கிப் பின்வாங்கி ஓடுவதும் பார்த்ததில்லையா? எவ்வளவோ முரட்டுத்தனமுள்ள குதிரை களையெல்லாம் இலேசிலே பழக்குகிறவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?

அவர்கள் மிகக் கொடுமையான குதிரைகளையும் தன்னந்தனியராகவே சென்று அடக்கி ஒடுக்குதலைப் பார்த்தால் அவர்களிடத்தில் ஏதோ மந்திரவலிமை இருக்கிறதென்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை; அவர்களிடத்தில் இருக்கும் மந்திர வலிமையெல்லாம் மனவலிமையேயாகும். அச்சம் உள்ளவனையும் அச்சம் இல்லாது மனவலிமையுள்ளவனையும் சிற்றுயிர்கள் மிக எளிதிலே தெரிந்துகொள்ள வல்லனவாய் இருக்கின்றன. சிறிதும் அஞ்சாத நெஞ்சினனாய்த் தன்னை உறுத்துப் பார்த்துக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/229&oldid=1628267" இலிருந்து மீள்விக்கப்பட்டது