உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
197

தன்பால் அமைதியோடும் அணுகுபவனைக் கண்டால் எத்தகைய சிற்றுயிரும் அவனுக்கு அஞ்சிப் பணிகின்றன. புலி கரடி சிங்கம் நச்சுப்பாம்பு முதலிய கொடிய செந்துக்களைப் பழக்குகின்றவர்களுக்குள்ள மனவலிமை இவ்வளவென்று வரையறுத்துச் சொல்லல் ஏலாது. ஆயினும், மனிதனுக்குள்ள ஆறறிவில்லாத சிற்றுயிர்களை அடக்குவதற்கு வேண்டும் மனவலிவினும், ஆறறிவோடு கூடிய மனிதர்களைத் தன் வயப்படுத்துவதற்குப் பன்மடங்கு மிகுந்த மனவலிவு வேண்டும். ஆனால், அச்சம் உள்ள அளவும் மனத்திட்பம் உண்டாகாதாகலின் அவ்வச்சத்தை வேரோடுங் களைந்து விடுதலில் கருத்தூன்றுக.

தன் மனச்சான்றுக்கு மாறுபாடில்லாமல் நடக்கையில் ஒருவனிடத்தில் அச்சம் நிகழாது; தான் நீதிநெறி வழுவாமல் ஒழுகும்வரையில் ஒருவன் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. உண்மை பிறழாமல் நடப்பவினடத்திலே எவர்க்காயினும் வருத்தமேனுங் கோபமேனும் உண்டாகுமோ? எல்லாரும் அவனை அன்புடன் வியந்து பாராட்டுதலன்றோ? செய்கின்றார்? அங்ஙனம் எல்லாரும் தன்னை விருப்பத்தோடு நேசித்து வருகையில் அவன் அவர்கள் எல்லாரிடத்திலும் மனம் மகிழ்ந்து அளவளாவுவனே யன்றி, அவர்களைக் கண்டு சிறிதும் அச்சம் உறுவான் அல்லனே; ஒரோவொருகால் தான் உண்மைநெறி திறம்பாமல் நடத்தலைக் கண்டு தீயோர் சிலர் அவனுக்குத் தீங்கிழைக்க முயல்குவராயின், உண்மை வழுவாத அவன் அதற்குச் சிறிதும் அஞ்சானாய்த் தன் உண்மையை உலகம் அறியும்படி தெருட்டி அவரைச் சீர்திருத்துதற்கே நினைக்கவேண்டும்.

ஆண்டவனையன்றி அணுவும் அசையாதாயின் பொய்யாராகிய தீயமக்கள் சிலர் நல்லோனுக்கு எங்ஙனம் தீது செய்யமாட்டுவார்? உண்மை வடிவாய் விளங்குங் கடவுள் உண்மை திறம்பாதவன்மாட்டு மிக முனைத்து விளங்குமாதலின் அந்நல்லோன் முன்னர்த் தீயோர் திரண்டு செய்த தீயவை யெல்லாம் பகலவன்முன்னர்ப் பாயிருள் மாய்ந்தாற் போல முதலறக் கெட்டு ஒழியும்.

“விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/230&oldid=1628269" இலிருந்து மீள்விக்கப்பட்டது