உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
200

❖ மறைமலையம் - 3 ❖

இவரிடத்துள்ள இந்நன்மை காரணமாகவே எல்லாம் வல்ல இறைவன்றிருவருள் இவரை இங்ஙனம் உயர்த்துவதாயிற்று. இவர் உயர உயர உலகத்தவர்க்கு நன்மையே உண்டாகுமாதலின், இவரது உயர்ச்சியைப்பற்றி யாம் அகம் மகிழக் கடவேம்; இவரைப் போலவே யாமும் நன்னெறி பற்றி ஒழுகினால் அருட்களஞ்சியமான ஐயன் எம்மையும் உயரச் செய்குவான்; இதனை விடுத்து இவரது உயர்ச்சி கண்டு யாம் மனம் புழுங்கியது எவ்வளவு பேதைமை!’ என்று கூர்ந்து ஆராய்ந்து அதனைமாற்றி அன்பு ஊறும் உள்ளம் உடையராகுக.

இதுகாறும் எடுத்துக்கூறிய தீயகுணங்கள் தமதுள்ளத்திற் சிறிதுந் தலைக்காட்டாதவாறு பழகவல்லார்க்கு அவர்தம் சிந்தையானது களங்கமற்ற தூயவானம்போல் தெளிவாய் இருக்கும்; அதிற்றோன்றும் அவர்தம் அறிவிச்சை செயல்களெல்லாம் ஒருங்கு திரண்டு அவ்வானத்திற்றிகழும் ஞாயிறு போல் ஒளிவிரிந்து துலங்காநிற்கும். அவை அங்ஙனந் துலங்கவே அவற்றில் நிறைந்து புறப்படும் அறிவாற்றல் அளவற்றவலுடையதாய் அவர் வேண்டியவெல்லாம் வேண்டியவாறே பெறுமாறு எய்துவிக்கும். இவ்வியல்பினராய் உள்ள பெரியவரின் உயிர் மிகவும் தூய்மை உடையதாய்ப் பொலியுமாகலின், அவ்வுயிரின் வழிப்பட்ட அவரதுடம்பும் மிக்க தூய்மை உடையதாகிப் பொன்னிறமாய் வலிவுற்று விளங்கி ஒரு நூற்றாண்டினும் மிகுந்த நாள் அவ்வுயிர்க்கு இருப்பிடமாய் நிலவும். ஏனென்றால், மனிதனுடைய நினைவின் வழித்தாகவே அவனுடம்பும் அவ்வுடம்பில் அமைந்த கருவிகளும் இயங்கா நிற்கும். குடிகாரன் உடம்பையும் அவன் உறுப்புக்களையும் உற்றுப் பாருங்கள்.

குடியன் அல்லாத தூயோன் உடம்பையும் உறுப்புக்களையும் சிந்தித்துப் பாருங்கள்; அவை இரண்டிற்கும் உள்ள வேற்றுமை எளிதிற் புலப்படும். இவ்வாறே எந்நேரமும் சினங்கொள்பவன் முகத்தையும் சினமின்றி அமைதியேயுடையவன் முகத்தையுஞ் சிறிது உற்றுப்பார்த்தால் அவை தமக்குள்ள வேற்றுமை தெள்ளிதிற் புலப்படும். இன்னுந் துயரமுள்ளவன் முகக்குறியும், மனமகிழ்ச்சியுள்ளவன் முகக்களையும் எளிதிலே கண்டு கொள்ளலாம். பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/233&oldid=1628274" இலிருந்து மீள்விக்கப்பட்டது