உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
259

இளைப்பாறும் இடமாம்; கழுத்திற்குமேல் தலைவரையில் அமைந்திருக்கும் அந்நாடியின் மேற்பகுதியான மூளையே அஃது அறிவோடிருந்து முயற்சிசெய்யும் இடமாம். அது தலையைப் பற்றிக்கொண்டு அறிவும் முயற்சியும் உடையதாய் நிற்குங்கால், தலையும் உடலும் நிமிர்ந்த படியாயிருக்கும். அறிவும் முயற்சியும் விட்டு அது கீழ் இறங்கித் துயில்கொள்ளப் போகுங்கால் தலையும் உடலும் நிமிர்ந்திருக்கமாட்டாமல் நிலத்தே கிடையாய்க் கிடந்து விடுகின்றன. உடம்பின் இவ்விருவகை நிலைகளும் நம்மனோர் கண்கட்கெதிரே நாடோறும் நிகழக் காண்டலால், உயிர் தலையைவிட்டு இறங்கித் துயிலுமிடம் கழுத்தின்கீழ் நெஞ்சிலிருந்து குறியின் அடிவரையில் ஆம் என்று நாம் உணரப் பெறுகின்றேம். ஒருவரை அறிதுயிலிற் செலுத்த வேண்டும் மற்றொருவர் அவரது தலையிலிருந்து தம்கைகளாற் கீழ்நோக்கித் தடவிய அளவிலே செலுத்துவோர் நினைவின் வழியே விரல்களிலிருந்து பாயும் மின் ஆற்றல் அவர்தம் உயிரை மூளையினின்று பிரித்துக் கீழே நெஞ்சத்தின்கட்டுயில் கொள்ளுமாறு ஏவுகின்றது. செலுத்துவோர் அதன்பின் தம் கைகளை மேன்முகமாய்த் திருப்பி அவரை எழுப்பிவிடுங் குறிப்போடு மேல்நோக்கித் தடவவே அறிதுயிலிற் சென்றோர் உயிர் நெஞ்சத்தை விட்டு மேலேறி மூளையைப் பற்றிக்கொண்டு விழித்து அறிவும் முயற்சியும் உடையதாகின்றது. இக்காலத்து உடம்பு நூல்வல்லாரும் உயிர்க்கு இருப்பிடம் கழுத்தின்கீழ்க் குறிவரையிற் செல்லும் நாடியின் அகமேயென்று ஆராய்ந்துரைக்கின்றார். உண்மையிவ்வாறாகலின், தடவுதலுக்கும் அறிதுயிலுக்கும் உள்ள இயைபு இதுகொண்டு நன்கு தெளியற் பாலதாம் என்க.

இனி, இடங்களைத் தடவுதல் என்றவகையில் மற்றொரு முறையும் பழகிக்கொள்ளற் பாலதாயிருத்தலின் அதனையும் சிறிது விளக்குவாம். உடம்பின்கண் ஏதேனும் ஓர் இடத்திற்கு மின்ஆற்றல் ஏறறல்வேண்டுமேனும், அல்லது அங்குள்ள நஞ்சினை இழுத்து நோய் அகற்ற வேண்டுமேனும் அவ்விடத்திற்கு நேரே விரல்களை ஒன்றோடொன்றுபடாமல் நேராகப்பிடித்து, அவ்விடத்தின்மேற்படாமல் அவற்றை ஒருவிரற்கடை அகல நிறுத்தி, நினைவை ஒருமுகப்படுத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/292&oldid=1627611" இலிருந்து மீள்விக்கப்பட்டது