உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
287


அதற்கவன் வாயைத் திறந்ததனால், நவச்சாரத்தை மிகவுங் காரமாகக் கலந்ததொரு நீரினை அவனுக்குப் பருகக்கொடுத்தார். அங்கிருந்த மற்றவர்களாற் சிறிது சுவைத்துப் பார்த்தற்கும் ஆகாத காரம் உடைய அந்நீரினை அவன் பால் குடிப்பது போற் குடித்துவிட்டு, இன்னும் வேண்டுமென்று வாயைப் பிளந்தான். அதற்குப் பின்னர், மேற்கூரையை நோக்கிய படியாய் இருந்த அவனது தலையை அவர் நிமிர்த்தி நல்லதொரு விளக்கின் ஒளிக்கு நேரேவைத்து, அவன்றன் கண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்துவிட்டார். ஆனால், அங்குள்ள அவ்விளக்கின் ஒளி குருடன் கண்களிற் படுவது போலிருந்ததேயல்லாமல், வேறேது பயனையும் அவன் கண்களுக்குத் தந்திலது. இவ்வாறெல்லாம் அம்மருத்துவரும் அவருடன் இருந்தோரும் ஆராய்ந்து பார்க்கவே, அவனுடைய ஐம்பொறிகளும் முழுதும் உணர்வற்ற நிலையில் இருக்கின்றனவென்பதை அவர்கள் எல்லாரும் நன்கு தெளிந்து கொண்டார்கள். அதன்மேல், அவனை ஒரு படுக்கைமேல் நீளப் படுக்க வைத்தார்கள். காலை பதினொரு மணிக்குத் துயிற்றப்பட்ட அந்நோயாளி பிற்பகல் மூன்று மணிக்கு முகத்திலே தண்ணீர் தெளித்தவுடன் அத்துயில் நீங்கி எழுந்தான். அவன் தெளிந்த முகத்தோடு செம்மையாய் ருந்ததைக் கண்டு அம்மருத்துவர், தம்முடன் இருந்த கற்றோர் முன்னிலையில் அவனைப் பின்வருமாறு வினவி விடைபெற்றார்.

‘இப்போது எப்படி இருக்கிறாய்?’ ‘மிகவுஞ் செம்மையாய் இருக்கின்றேன்.’

‘தொண்டையிலாவது வேறெங்காவது நோவிருக்கின்றதா?’ ‘தொண்டையில்மட்டுஞ் சிறிது வருத்தம் இருக்கின்றது, மற்ற இடங்களில் நோய் இல்லை.’

‘இன்றைக்கு உனக்கு யாது நேர்ந்தது?’ ‘எனது வீங்கிய விதையில் உள்ளநீரை வெளி எடுக்கும் பொருட்டு இம்பரா மருத்துவக் கழகத்திற்கு இன்று காலையிற் சென்றேன்’.

‘அங்ஙனமே நீர் வெளியே எடுக்கப்பட்டதா?’ ‘ஆம்.’

‘விதையை அறுத்த பிறகு நேர்ந்தது நினைவில் இருக்கின்றதா?’‘உடனே யான் நல்லதூக்கத்திற்குப் போனேன், வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/320&oldid=1626552" இலிருந்து மீள்விக்கப்பட்டது