உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
334

❖ மறைமலையம் - 3 ❖


ஒருகால் யாம் திருநெல்வேலிக்குச் சென்றிருக்கையில், இவ் வறிதுயின்முறைகளில் தேர்ச்சிபெற்ற ஓர் அன்பர் தம்மால் அறிதுயிலிற் பலகாற் செலுத்தப்பட்ட ஒரு பார்ப்பன இளைஞரை எம்மிடம் அழைத்து வந்தார். அது மாலைக் காலம், அப்போதுதான் விளக்கேற்றப்பட்டது. அவர் அவ்விளைஞரை ஒரு சாய்மானக் குறிச்சியில் அமர்த்திச் சிறிது நேரத்தில் ஆழ்ந்த நடைத்துயிலிற் போகச்செய்து, “இப்போது இவர் தெளிவுக்காட்சி யுடையவராயிருக்கின்றார். தாங்கள் ஏதேனும் ஒரு பொருளைக் கையில் மறைத்து வைத்துக் கொண்டால், அதனை இவர் உடனே அறிந்து சொல்வர்” என்றார். யாம் அச்சமயத்திற் கிடைத்த ஒரு சாவியை அது கோக்கப்பட்ட கயிற்றோடும் எடுத்து அங்கிருந்தார் எவர்க்குந் தெரியாமல் எமது வலது கையினுள் மறைத்து வைத்துக் கொண்டேம். பிறகு அவர் அறிதுயிலிலிருக்கும் அவ்விளைஞரை நோக்கி “இப்போது நீர் விளக்குகளைக் காண்கின்றீர், எல்லாம் ஒரே வெளிச்சமாய் இருக்கின்றன. உமக்குப் பக்கத்தே நிற்கும் இவர்களையுங் காண்கின்றீர்” என்று கூறினார்.

அவ்விளைஞரும் அதற்கிணங்கி “ஆம், ஒரே ஒளியாயிருக்கின்றது.நீங்கள் குறிப்பிட்டவர்களையும் பார்க்கின்றேன்”. என்றால். அப்படியானால், இவர்களின் வலது கையினுள்ளே என்ன இருக்கின்றது?” என்று அவ் அன்பர் வினவினார். அதற்கவர் முதலில் “அவர் கை மூடியிருக்கின்றது, யான் உள்ளே யிருப்பதைப் பார்க்கக்கூடவில்லை.” என்று விடைகூறினார். மறுபடியும் அவர், “இப்போது நன்றாய் உற்றுப்பாரும், கையினுள்ளே யிருப்பது நன்றாய்த் தெரியும், வெளிச்சம் நன்றாயிருக்கின்றது.” என்றார். அவ்விளைஞர் “ஆம், அவர் கையினுள்ளே நீளமாய் ஒன்றிருக்கின்றது; ஓ, அஃது ஒரு சிறு கயிறு.” என்றார். திரும்பவும் அவர் “பின்னும் என்ன இருக்கின்றது? நன்றாய் உற்றுப்பாரும்.” என்று வற்புறுத்துச் சான்னார்.“அதில் ஏதோ ஒன்று சிறிதாயிருக்கின்றது; ஆனால் அஃது இன்னதென்று தெரியவில்லை.” என மொழிந்தார். அவர் இல்லை. இப்போது அது நன்றாய்த் தெரியும். வெளிச்சம் இன்னும் நன்றாயிருக்கின்றது; நன்றாய்ப் பாரும்” என்றார். “ஆம், இப்போது மிகுந்த ஒளி வீசுகின்றது; ஓ, அஃது ஒரு சாவி” என்று கடைசியாக உண்மையைச் சொல்லிவிட்டார். அதன்பின்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/367&oldid=1626590" இலிருந்து மீள்விக்கப்பட்டது