உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
333

வல்லாமலும், தாம் விழித்திருக்கும் நிலையில் உணர்ந்தவற்றை நடைத்துயிலின்கட் சென்றவுடனே மறந்தும், நடைத்துயிலின்கண் உணர்ந்தவற்றை விழிப்பு நிலைக்கு வந்தவுடன் மறந்தும் அறியாமையிற் பற்றப்பட்டவராயிருப்பர்; ஒவ்வோருடம்பிலும் வெவ்வேறு உயிர்போல் நடப்பர்; அருந்தவத்தினரோ அவ்வெல்லா வுடம்புகளிலும் ஓருயிராகவே ஒரு தொடர்புபட்ட வுணர்வுடையராயிருப்பர். இதுவே நடைத்துயிலின்கட் செலுத்தப்படுவோர்க்கும், அருந்தவத்தோர்க்கும் உளதாகிய வேற்றுமையாம். ஆதலால், அருந்தவத்தோர்க்கு நிகழ்வதைத் தவக்காட்சி யெனவும், நடைத்துயிலில் நடைத்துயிலில் இருப்போர்க்கு நிகழ்வதைத் தெளிவுக் காட்சியெனவும் அவ்வேற்றுமை தோன்றக் கூறினாம்.

இனி, இந்நடைத்துயிலில் இருப்போர்க்குக் கண்கள் மூடியிருப்பினுந் திறந்திருப்பினும் அவர் காண்பன நம் ஊன விழிகளுக்கு நேரே புலப்படும் பொருள்கள் அல்ல; மற்று நங் கண்களுக்கு நேரேயில்லாமல் தொலைவிலும் அணிமையிலும் மறைந்திருப்பவைகளேயாம். மனத்தூய்மையும் நுண்ணறிவுமுடைய நம் மாணவர் ஒருவரை ஒருகால் நாம் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்த அவருடனே நடைத்துயிலிற் சென்று தெளிவுக்காட்சி யுடையரானார். அப்போதவர் கண்கள் மூடியே இருந்தன. அந்நிலையில் அவர் மறைந்த பொருள்களைக் காண வல்லுநராய் இருப்பரா எனத் தெரிதல் வேண்டி, எமது கைக்கடிகாரத்தை எடுத்து அவரது பின்றலைப்புறத்தே பிடித்து “இப்போது நீர் இக்கடிகாரத்தைக் காண்கின்றீர்; இதன் முகத்தட்டின்மேல் மணி முள்ளும் நிமிடமுள்ளும் இயங்குவதையுந் தெளிவாய்க் காண்கின்றீர். ஆம், இவற்றைக் காண்கின்றீரல்லவா?” என்று யாம் வினாவ, அவர்தம் கண்கள் நன்றாய் மூடியிருந்தும் “ஆம், ஒரு கைக் கடிகாரத்தைக் காண்கின்றேன்; அதன் முகத்தட்டின்மேல் முட்கள் அசைகின்றன” என்று அவர் அந்நடைத்துயிலிருந்தபடியே விடை கூறினார். அதன்பின் “அப்படியானால் இப்போது மணி என்? சொல்லும்” என்றேம். அதற்கவர் “இப்போது ஆறடிக்க ஐந்து நிமிடம்” என்று பிசகாமற் கூறினார். அன்று மாலைக்காலம், அவர் சொல்லியபடியே ஒரு நிமிடமும் பிசகவில்லை; ஆறடிக்க ஐந்து நிமிடங்களே இருந்தன. இதுகண்டு வியப்புற்றேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/366&oldid=1626589" இலிருந்து மீள்விக்கப்பட்டது