142
அப்பாத்துரையம் - 24
அவன் மனநிலை, அவன் நடத்தை ஆகியவை கண்டு அவன் தாய் வருந்தினாள். ஆனால் அவன் அதைக் கவனிக்கவில்லை. தாய் அதுபற்றிப் பேச வாயெடுத்தபோது அவன் எரிந்துவிழுந்தான். கணவனுக்கு அஞ்சி யதைவிட இந்த மலைநாட்டுப் புதல்வனைக் கண்டு அவள் நடுங்கினாள். அவன் சீற்றத்துக்குத் தாயின் அன்புகூட அஞ்சிற்று.
ஆனால் எவர் சீற்றத்தையும் சட்டைசெய்யாத ஓலாவை அவன் உள்ளமே சுட்டது. அவன் இப்போது தன்னை வெறுத்த அளவு என்றும் எவரையும் வெறுத்ததில்லை. ஒரு நாளிரவு அவன் சிறிது பணத்துடனும் ஒரு நல்ல குதிரையுடனும் இரவோடிரவாக வெளியேறினான். மறுநாள் அவன் எங்கே சென்றான் என்று எவரும் அறிய முடியவில்லை. சிலநாள் எல்லாரும் தேடினர். சிலநாள் அவன் வரவை எதிர்பார்த்தனர். பின் எல்லாரும் அமைந்து மறந்தனர்.
கெர்ஸ்டாப் குடும்பத்தில் ஆண் மரபு இருந்த பெருமை தற்காலிகமாகக் குலைவுற்று இருந்தது.
இரண்டாண்டுகள் சென்றன. இரண்டு தடவை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிற்று. இரண்டு தடவை ஆறுபனிப்புயலின் சறுக்கு மேடையாயிற்று. வழக்கம்போல இயற்கை ஆண்டுதோறும் தூங்கி எழுந்தது. ஆனால் ஓலாவின் செய்தி எதுவும் மலைநாட்டை எட்டவில்லை.
ஓலா தன் மலைநாட்டு முரட்டுத்தனத்துக்கும் மலை நாட்டுக்கும் ஒருங்கே நீண்ட விடை தந்துவிட்டான். தொலைவில் ஸ்டாக்ஹோம் நகரில் கலைப்பயிற்சிக்கூடங்களில் சென்று அவன் கலைகள் பயின்றான். அரசியல் கழகங்களில் சேர்ந்து அரசியல் நடைமுறைகளில் கருத்துச் செலுத்தினான். தன் முரட்டுக் குணங்கள் இவற்றால் பண்படைய வேண்டும் என்பதே அவன் முனைத்த எண்ணமாயிருந்தது.
பயிற்சி காரணமாகவாயினும் சரி விருப்பம் காரணமாக வாயினும் சரி, அவன் இயற்கைப் பண்புகளில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது மட்டும் உண்மை. வீரத்தின் வெற்றிகளுக்கு ஒரு எல்லை உண்டு. பொறுமை, அன்பு, தியாகம் ஆகியவற்றின்