1. படகுகள் பிரிந்தன
ஜப்பான் நாட்டின் கண்கவரும் அழகுக் காட்சிகளுள் உஜி ஆற்றுப் பள்ளத்தாக்கு ஒன்று. அதன் இரு கரைகளிலும் பச்சைக் கம்பளம் விரித்திருந்தது போல, காடும் கழனியும் பரந்து காணப்பட்டன. இரவில் ஆற்றங்கரையின் காட்சியை ஆண்டு முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை அற்புதமாகக் கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது! பகலவன் மறைந்துவிட்டான். அது கண்ட மின்மினிகள் காடு கழனி களிலிருந்து தோன்றி வானவெளி எங்கும் பரந்தன. பறக்கும் இவ்வொளிமணிகள் வானகத்து விண்மணிகளுடன்
ன்பமயமான வேளை!
போட்டியிட்டு நீரில் நிழலாடின. எம்மருங்கும் எழிலின் ஆட்சி! கியோட்டோ நகரத்தின் இளைஞரும் இளநங்கையரும் இந்த அரிய காட்சியைக் கண்டு உள்ளம் களித்தவண்ணம் இன்பப் படகுகளில் அமர்ந்து, ஜப்பானிய யாழாகிய சாமிசனில் இன்னிசை எழுப்புவார்கள். அந்த நல்லிசை எங்கும் பரவும். அது கேட்டு அனைவரும் மகிழ்வது வழக்கம்.
உஜி ஆற்றின் வனப்புக்குக் கலங்கரை விளக்கம்போல ஒரு பெரிய பாலம் கம்பீரமாக நின்றது. விசிறி போன்ற வேலைப்பாடமைந்த அது அழகிய வளைவுகளை உடையது. வளைவுகளின் கீழே ஆற்று நீர் குமிழியிட்டுக் கலகலவென்று ஓடிக்கொண்டிருந்தது. இப்பால முகப்பில் ஆற்றுக் காட்சியைக் கண்டுகளிப்படைய எண்ணும் இன்ப வாணருக்கென ஒரு தேநீர் மாளிகை! தேநீர் அருந்திய படியே இளைஞர் தென்றலை நுகர்ந்து அழகை அள்ளிப் பருகுவதற்காக, அம்மாளிகையின் புறக்கூடத்தில் சில விசிப்பலகைகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து, ஆற்றில் மிதந்து செல்லும் படகுகளும், அழகை வழங்கி நிற்கும் வளைவுப் பாலமும் கூப்பிடு தொலைவிலேயே இருந்தன. இங்கிருந்தபடியே ஆறு முழுவதையும் கண்களால்