உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(300

அப்பாத்துரையம் - 24

எதன் முழுநிறைபடிவமும் என்றும் தெளிவாக உருவானது கிடையாது. ஆகவே எது அறிவு முயற்சி, எது கலை அல்லது அழகு முயற்சி, எது வாய்மை அல்லது ஒழுக்கத்துறை முயற்சி என்று செயல்வேளையில் கூறமுடியாது. ஆயினும் அம்முத்திசை நோக்கிய முயற்சிகளே அறிவுநூல், அழகுக்கலை, ஒழுக்கப் பண்பு ஆகியவை. அவை அவ்வத்துறைப்பண்புகளின் முழுநிறை படிவங்கள் நோக்கி வளர்ந்துவருகின்றன. நிலையான செயல்கள் யாவும் இம்முத்திசை நோக்கியவையே ஆகும். இம்மூன்றும் இறுதி எல்லையில் ஒன்றுதானா. மூன்றா என்பதைக்கூட இன்றைய மனித நாகரிகத்தின் அறிவுநிலையில் நுனித்துணர முடியுமேயன்றி வரையறுத்துக் கூறமுடியாது. மூன்றும் ஒன்றை ஒன்று தழுவியவை என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.*

ஆன்மிக வெற்றி என்பது மேற்கூறிய மூவகை வெற்றி களையும் கடந்தது. அது அம்மூன்றின் ஒருமைப்பாடுணர்ந்து அவற்றை ஒரே திசையில் நாடுவது. இதில் கருத்துச் செலுத்து வோர் அறிவும் பண்பும் தூய்மையும் ஒருங்கேகொண்ட கருத்தினராய், அக்கருத்துத் தூண்டும் வழி உள்ளத்தின் பண்புகள் யாவற்றையும் செலுத்திச் செயலாற்றுபவர் ஆவர்.

செயல் வெற்றி எத்தகையதாயினும் அது முயற்சியின் தலைமீது அணியப்பெற்ற அணிமுடி. அணிமுடியின் மீதுள்ள மணிக்கற்களாகக் கருத்து இயங்குகிறது. இன்ப நாட்டம், தளர்ச்சி, துப்புரவின்மை, பொய்ம்மை ஆகியவை இவற்றைக் கீழ்நோக்கி இழுக்கும் நில ஆற்றல்கள். தன்னடக்கம், உறுதி, தூய்மை, நேர்மை, கருத்தாற்றல் ஆகியவை அதைக் கீழ்நோக்கி விழாது தடுத்து நிறுத்தி உயர்த்தும் பண்புகள்.

ஆன்மிக வெற்றி கண்டவன் பெரும்பாலும் கீழ் நோக்குவதில்லை. ஆயினும் வளர்ச்சிப்பண்பு செயலாற்றாத இடத்தில் தளர்ச்சிப்பண்புகள் தலைகாட்டத் தொடங்கும். உள்ளார்ந்த, முற்றிலும் தடமழிக்கப்படாத தீமையின் தூசுகள் இப்போது நிறைமதியின் கறை மறுகளாக வளர்ந்து அதை ஒளி மழுங்கச் செய்யும். ஆகவே ஆன்மிக வெற்றியடைந்தவர்கள்கூட அதனைப் பாதுகாக்கும் முறையில் எப்போதும் அவ்வெற்றிச் சக்கரத்தைச் சுழற்றிக்கொண்டேதான் இருந்து தீரவேண்டும்.*