உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

55

டிருந்த ஒரு பெருங் கரும்பாம்பினையுங் கண்டார். அப் பறவையோ அப் பாம்பைச் சுற்றி வட்டமிட்டுப் பறந்து பறந்து வரவர அதற்குமிக அருகில் துயரத்தொடு கூக்குரலிட்டுக் கொண்டு வரலாயிற்று. ஏறக்குறைய அந்தப் பறவை அப் பாம்பின் தாடையண்டை வந்துவிட்டதென்றே சொல்லலாம். அந் நேரத்தில் அதனைப் பார்த்த அவர் தமது கையிலிருந்த சாட்டையால் அப் பாம்பைத் துரத்திவிடவே, அப் பறவை களிப்புற்ற குரலோடுந் தப்பிப் பறந்தோடிப் போயிற்று.

இன்னும், ஒரு குடாக்கடலின் பக்கத்தே பெருமான் ஒருவர் ஒரு நாள் வழிநடையாய்ப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் அணில் அக்குடாவுக்கும் அதற்குச் சிறிது எட்டநின்ற ஒரு பெரிய மரத்திற்கும் இடையில் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டேயிருந்தது. அவ்வணிலின் மயிர்கள் சிலிர்த்து நின்றமையால் அது மிகவுந் திகில் கொண்டிருந்ததென்பது புலனாயிற்று. வரவர அதன் திரும்பி வருகை சிறுகிற்று. அப்பெருமான் அதற்கு ஏது என்னென்று நோக்க நின்றார். உடனே அங்கொரு சாரைப்பாம்பு தலையையுங் கழுத்தையுந் தூக்கிக் கொண்டு அப் பெரிய மரத்தின் பொந்திலிருந்து ஒரு தாளை வழியே அவ்வணிலை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டார். அந்த அணில் கடைசியாக ஓட்டம் ஓய்ந்து அப் பாம்பின் தலைக்கிட்டத் தன் தலையை வைத்துச் சும்மா கிடந்தது. அதன் மேல் அப்பாம்பு தன் வாயை விரியத் திறந்து, அவ்வணிலின் தலையைக் கெளவிற்று. அத்தறுவாயில் அப்பெருமான் தமது சவுக்கினால் அப் பாம்பின் கழுத்தில் ஓர் அடி கொடுக்கவே, அது கௌவிய அவ்விரையைக் கக்கிவிட்டுத் தன் தலையை உள்ளிழுத்துக் கொண்டது. உடனே அவ்வணில் தப்பிப் பிழைத்தோடிப் போயிற்று என்று இங்ஙனம் உண்ை மயாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் மக்களினுந் தாழ்ந்த சில உயிர்களுங் கூடப் பிறவுயிர்களை, உற்றுப் பார்க்குந் தங்கட் பார்வையின் வன்மையினால் தம் வயப்படுத்தும் பான்மை நன்கு விளங்கும். எனவே, அச் சிற்றுயிர்களினும் எத்தனையோ மடங்கு மிகச் சிறந்த மாந்தர்கள் தமது கட்பார்வையினை வலுப்படுத்தி உற்றுநோக்கப் பழகுவராயின், அவர் பழகுவராயின், அவர் வசிய ஆற்றலில் எவ்வளவோ மேம்படுவரென்பது நாம் சொல்லாமலே விளங்குமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/88&oldid=1576040" இலிருந்து மீள்விக்கப்பட்டது