தாயகத்தின் அழைப்பு
39
அவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை புதர்க்காட்டு மக்களின் மூடபக்தியைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சூசன் நன்சச் யூஸ்டேஷியாமீது கொண்ட தப்பெண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. வரவர அவள் நோயில் நலிந்தாள்! யூஸ்டேஷியாவின் சூன்யத்தால் வந்தவிளைவே அது என்று நினைத்த அவள் அதை ஒழிக்க ஒருவழி கண்டாள். சூனியக்காரிகளை ஊசிகொண்டு குத்தினால், சூனியத்தின் ஆற்றல் கெட்டுவிடும் என்ற நம்பிக்கை நாட்டுப்புறத்தில் உண்டு. அதை அவள் நடைமுறையில் துணிந்து செய்துவிட்டாள்.கோவிலுக்கு அன்றுயூஸ்டேஷியா வந்திருந்தாள். சூசன் அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்து வழிபாட்டில் அவள் ஆழ்ந்திருந்த சமயம்பார்த்துக் கூரிய தன்னூசியை அவள் கையில் ஆழக் குத்திவிட்டாள். யூஸ்டேஷியா உடனே மூர்ச்சிக்கவே, அவள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டாள்.
ஊரில் இந்நிகழ்ச்சி பரபரப்பை ஊட்டியது. இயல்பாகவே யூஸ்டேஷியாவை ஊர் மக்களில் பலருக்கும் பிடிக்கவில்லை. அவள் சூனியக்காரி என்ற பழி அவள் மீதுள்ள வெறுப்புக்கும், வெறுப்பு அவள் சூனியக்காரி என்று பழிப்பதற்கும் சாக்காயின. ஆகவே பெரும்பாலோர் சூசனையே ஆதரித்தனர். கிளிம்மட்டும் அவள்மீது செய்த செயல் கொடிதென்றும், புதர்க்காட்டி ன் இம்மூட நம்பிக்கை கல்வி ஒன்றால் மட்டுமே அழியுமென்றும் வாதாடினான்.
ஏற்கனவே கிளிம்மை ஆர்வத்துடன் பூசித்து வந்தவள் யூஸ்டேஷியா. அவ்விருவரையும் மேலும் பிணைக்கும் மற்றொரு நிகழ்ச்சியும் இரண்டொருநாளில் ஏற்பட்டது. வழக்கம்போல யோப்ரைட்டின் இல்லத்தில் பலர் யூஸ்டேஷியாவைப் பற்றிப் பேசினர். அவள் தனிவாழ்வு, இரவு பகல் புதர்க்காட்டில் திரிதல், தீப்பந்தம், முணுமுணுப்பு ஆகிய யாவும் கண்டிக்கப்பட்டன. சூனியக்காரி என்ற பழியும் இறுதி முத்தாய்ப்பாகக் கூறப்பட்டது. கிளிம் எல்லாக் கூறுகளிலும் அவள் பண்புகளை ஆதரித்து விளக்கிவந்தான். இச்சமயம் யூஸ்டேஷியா வீட்டில் நீரிறைக்கும் வாளி கிணற்றில் விழுந்துவிட்டதை எடுக்க நீள வடக்கயிறுகள் தேவை என்று ஒரு சிறுவன் வந்தான். திருமதி யோப்ரைட் கையிலகப்பட்ட கயிறெல்லாம் எடுத்துத் தந்தாள். கயிறுகொண்டு செல்பவனுடன் சென்று உதவுவதாகக் கூறி கிளிம்மும் உடன்சென்றான்.