சாகுந்தல நாடகம்
129
மாதலி : நீடு வாழ்வீர்! தவம் இயற்றுவோர் தவப் பயன் பெறுதற்கு இடமா யுள்ளதும், கிம்புருடர் தம் உறையுளாய் இருப்பதுமான இம்மலை ஏமகூடம் என்னும் பெயருடையது. நான்முகக் கடவுளின் புதல்வரான மரீசிக்குப் பிறந்து தேவரையும் அசுரரையுந் தோற்றுவித்தவரான காசியபர் தம் மனைவியாரோடும் இதோ தவம் இயற்றுதலைப் பார்மின்!
அரசன் : அவ்வாறாயின், தூயோர் பரவப்படாமற் செல்லலாகாது. அத் துறவோரை வலம்வந்து போக விரும்புகின்றேன்.
மாதலி : நல்ல எண்ணந்தான், (கீழ் இறங்குதல் காட்டி) இதோ கீழ் இறங்கிவிட்டோம்.
அரசன் : (வியப்போடு) உருள் விளிம்புகள் ஓசை யுண்டாக்கவில்லை; புழுதியும் மேல் எழும்புவதாகத் தோன்ற வில்லை; குலுங்குதலில்லாத உமது தேர் கீழ் இறங்கின போதிலும், நிலத்தைத் தொடாது நிற்றலால் அவ்வாறு இறக்கினதாகவே தோன்றவில்லை.
மாதலி : நீடு வாழ்வீர்! உமக்குந் தேவேந்திரனுக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான்.
அரசன் : ஐய மாதலி! மாரீசரது தவப்பள்ளி யாங்கு
உளது?
மாதலி : (கையாற் சுட்டிக்காட்டி) கரையான் புற்றிற் பாதி மறைந்த வடிவத்தோடும், பாம்புரிகள் ஒட்டிக் கொண்டுள்ள மார்போடும், பழங்கொடிகளின் இளவிழுதுகள் வளையமாய் இறுகச் சுற்றிக்கொண்டிருக்குங் கழுத்தோடுந், தோள் வரையில்
தாங்கிக் கொண்டிருப்பதும் பறவைக் கூடுகள் நிரம்பப் பெற்றதுமான சடைமுடியோடுங் கதிரவன் ஒளிவட்டத்தின் எதிர் முகமாய் நின்றபடியே அடிமரம் போல் அசைவின்றி அதோ தவம்புரியும் அம்முனிவருள்ள இடம் அதுதான்!
அரசன் : கடுந்தவம் புரியும் அவர்க்கு வணக்கம்!