பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

137

அல்லது ஆங்காங்கு கோட்டை வாசல்களில் தூக்குக் கயிற்றில் தியாகிகளாகி தொங்கினர். கும்பெனியாரின் மூர்க்கத்தனமான கோரச் செயல்களினால் இந்தப் பகுதிகளில் மக்கள் கிளர்ச்சி இப்பொழுது மூன்றாவது முறையாக நசுக்கப்பட்ட பொழுதும்[1] அவர்களது மேலிடம் எதோ ஒரு வகையான இயல்பு அற்ற நிலைமையினால் பீதி கொண்டிருந்தது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டால்? காரணம் மருது சகோதரர்களின் தலைமையில் இயங்கிய கிளர்ச்சிக்காரர் மயிலப்பனையும் மதுரை மாவட்ட பாளையக்காரர்கள் சிலரையும் எவ்வளவோ முயற்சித்தும் கும்பெனியாரால் கைது செய்ய முடியவில்லை. அவர்கள் கிளர்ச்சியை மீண்டும் துவக்கினால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கத்தக்க வேறு தலைவர்கள் இருக்கின்றனரா என்பதை கும்பெனியார் சிரத்தையுடன் ஆராய்ந்து பார்த்தனர். ஆம்! இன்னும் ஒருவர் இருக்கிறார். மிகவும் பாதுகாப்பான சிறைக்குள்! அவர் இராமனாதபுரம் அரசர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி என்பது அவர்கள் கண்ட முடிவு.

திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என கும்பெனியார் கருதினர். முதுகுளத்துார் புரட்சியின் போது அவரை தொலை தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் லூவிங்டன் பரிந்துரைத்திருந்தார்.[2] ஆதலால் திருச்சிக் கோட்டையில் இருந்து அவரை அப்புறப்படுத்துவது என்ற முடிவு ஏற்பட்டது. அதனை செயல்படுத்தினால் தான் தெற்கேயுள்ள கும்பெனி கலெக்டருக்கும் மற்ற தளபதிகளுக்கும் மனநிம்மதி ஏற்படும் என்ற நிலை!


  1. Military consultations, Vol. 289, 29-10-1801, p. 7728
  2. Madurai collectorate Records, Vol. 1157, 27-4-1799 pp. 75-78.