உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(284) ||

அப்பாத்துரையம் - 29

முதலில் துலங்கும். ஆனால் அப்பயணத்தின் ஒவ்வோர் அடியும் அவன் வேதனையைக் குறைக்கும். அதன் முடிவோ, இனத் தாயக எல்லையில் கொண்டுவிட்டு அதனை அறவே அகற்றும்.

இனத் தாயக வாழ்வில் தனி வாழ்விலுள்ள கடுமை, சிக்கல், அருமுயற்சி எதுவும் இராது. அவாவின் பசிக்கும், துடிப்புக்கும் அவன் அடிமையல்ல. அவற்றுக்கு அஞ்சி அவன் நடுநடுங்க வேண்டியதில்லை. ஏனெனில் அவன் புதுவாழ்வு, வாய்மை நாட்டம், பழைய அவாக்களுடன் வைத்தெண்ணப்படத் தக்க ஒன்றன்று. அது அவா ஆர்வம் மட்டுமே.

அவா தனக்கெனப் பெறத் துடிக்கிறது. பெறாவிட்டால் இன்னும் துடிக்கும். பெற்றால் பின்னும் வேறு அவா எழுப்பித் துடிதுடிக்கும். ஆனால் அவா ஆர்வமோ தனக்கெனப் பெறும் துடிதுடிப்பு அற்றது. அது துடிப்பதற்கு மாறாக, விதிர்விதிர்ப் புடன் எதிர்நோக்குகிறது.எதிர்நோக்கி விதிர்விதிர்ப்புடனேயே காத்திருக்கிறது.அது புலனவா அன்று, நிறைவினால்கூட அமைதி பெறாததன்று.அது இதய அவா, நிறைவை உறுதியுடன் நோக்கிக் காத்திருப்பது, நிறைவின்பின் மீண்டும் நிறைவே கோரி நிற்கும் அமைதி உடையது.

அவா என்றும் மேன்மேலும் அவாவாகப் பெருகும். ஆனால் அவா ஆர்வம் நிறைவேற்றத்தை எதிர்பார்த்து வாழ்வ தில்லை. எதிர்நோக்கி நிறைவேறும்வரை அமைந்து காத்திருக்க ஒருப்படுகிறது. அவா என்றும் குறை உடையது. அவா ஆர்வம் என்றும் நிறைவுடையது. அவாவுக்கு ஒரு எல்லை கிடையாது, முடிவில்லை. அவா ஆர்வத்துக்கு எல்லையுண்டு, அதுவே அமைதி. அது மேலும் மேலும் விரிவடையும். ஆனால் அது குறைவையன்று, நிறைவையே வளர்க்கிறது.

அவா அழிந்து, அமைதியின் ஆர்வம் இனமளாவ வளர்ந் தாலும் அது தனி இதயத்தில் இன்பதுன்ப அலைகளை உண்டு பண்ணுவதில்லை. அது ஒரே அமைதியான இன்பமயமாய் அலைபாய்கிறது. பேரின்பக் கரைநோக்கி அவ்வலைகள் சென்று கொண்டேயிருக்கும்!