உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இலட்சிய வரலாறு


இப்போதுள்ள நிலைக்கும், தனி உரிமை பெற்றால் ஏற்படும் நிலைமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதனை அவர் விளக்கவில்லை ! அதுமட்டுமல்ல, அவருடைய 'ஆசை'க்கு நேர்மாறாக இப்போது அ. நி. சபையில், இந்த 'அங்கங்கள்' பங்கப்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் மறைக்கிறார்— தடுக்க முடியாத காரணத்தால் ! தனி அரசுரிமை கோருகிறார் நாம் அதிலே மாசு மருவற்ற நிலை கேட்கிறோம். அவர், 'தனி’ அரசுரிமை பெற்றாலும், இந்திய சமஷ்டியிலே சேரவேண்டும் என்கிறார். இந்திய சமஷ்டி மட்டுமல்ல, நேரு கூறும் ஆசிய சமஸ்டியானாலும் சரி, வெண்டல் வில்க்கி கூறிய உலக சமஸ்டியானாலும் சரி, சேருவோம்; தவறில்லை; தடையில்லை. ஆனால், தனி அரசுரிமை வேண்டுமே, எங்கே அதற்குத் திட்டம்— திட்டம் தீட்டிவிடுகிறார்களே அ. நி. சபையில் ! அது காமராஜரின் ஆவலைப் பூர்த்திசெய்யக் கூடியது அல்லவே ! அதற்கு என்ன சொல்லுகிறார் அன்பர் ?

எதிர்ப்பாளர்கூட இலட்சியம் பேசக் கண்டோம்

திராவிடஸ்தான் கூடாது என்று பேசுமுன்பு, ஏன் கேட்கிறார்கள் என்பதை, பொறுப்பான இடங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கேட்டறியவேண்டும். அதற்கு அழைப்புச் சீட்டுதான், விழா நாள். நாம் இந்த இலட்சியத்தை எதிர்ப்பதாகக் கூறும் நண்பர்களின் வாய்மொழிகளிலே கூட நமது இலட்சியத்தின் சாயல் இருக்கக்கண்டு மகிழ்கிறோம். இந்நிலைக்குக் காரணம் என்ன? இலட்சியம் வளர்ந்துவிட்டது எதிர்பாராத இடங்களி லெல்லாம் அதன் மணம் இருக்கக் காண்கிறோம். இனிச் சிலகாலம் நமது இலட்சியத்தை விளக்கி — குறிப்பாக அதற்கான பொருளாதாரக் காரணங்களை விளக்கிக் கூறினோமானால், திராவிடநாடு திராவிடருக்கே என்பது கட்சி முழக்கம் என்ற நிலை மாறி, நாட்டு முழக்கமாகும். பல தடைகளை மீறி வளர்ந்துள்ள இலட்சியம் இந்த முழு உருவுடன் விளங்கத்தான் போகிறது. ஏனெனில் இந்த இலட்சியம் விழிப்புற்ற மக்களின் உரிமை முரசொலி— கட்சிப் பேச்சல்ல.