உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 33

ஆண்ட வனுக்குக் கொண்டுபோய்ப் படைக்க வேண்டும். படைக்கும்வரை நீ எதுவும் உண்ணப்படாது. இவற்றை யாரும் தீண்டவும் விடப்படாது. கூறியபடி செய்தால், ஆண்டவன் செத்தவன் உயிர் பெற்று வரும்படி உயிர் மருந்தை உனக்கு அளிப்பார்" என்றான் ஆண்டி.

செம்பியன் ஆண்டிக்கு நன்றியும், வணக்கமும் தெரிவித் தான்.மாங்கனிகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

காட்டு வழியில் பசி அவன் காதை அடைத்தது. நீர் வேட்கையால் அவன் நா உலர்ந்தது. ஆனால், அவன் மாங்கனியின் மீது சிந்தனை செலுத்தவில்லை. வேறு உணவையோ, நீரையோ நாடவும் இல்லை. சேந்தனை உயிரோடு காணும் அவாபசியையும், விடாயையும் வென்றது.

புல் பூண்டோ, நீரோ அற்ற மணல்பரப்பில் அவன் நடந்து சென்றான். முற்பகலேயானாலும் வெயில் கொளுத்திற்று. அவன் தலை சுழன்றது. ஆனால், அந்நிலையிலும் இரங்கத்தக்க ஒரு காட்சி அவன் கண்களில் பட்டது.

ஒரு குரங்கு வெயிலில் பசியாலும், விடாயாலும் வாடிச் சுருண்டு கிடந்தது. அது கிட்டத்தட்டச் சாகும் தறுவாயில் இருந்தது.

குரங்கினிடம் செம்பியன் இரக்கம் கொண்டான். அவன் கால்கள் அதைக் கவனிக்காமல் செல்ல மறுத்தன. ஆனால், அதே சமயம் சேந்தன் நினைவு அவன் கால்களை முன்னே தள்ளின. இறுதியில் இரக்கம் வென்றது. செந்தில் ஆண்டவனுக்குப் படைக்க வைத்திருந்த மாங்கனிகளில் ஒன்றை அவன் அதற்குக் கொடுத்தான்.

குரங்கு அவனுக்கு நன்றி தெரிவித்தது. "திரும்பி வரும்போது இந்த இடத்திலேயே நான் இருப்பேன். நான் ஓர் அப்பாவிக் குரங்குதான். ஆனால், என்னால் இயன்ற அளவு உன் களைப்பை ஆற்றுவேன்” என்றது.

"செந்திலாண்டவனிடம் இனி மூன்று மாங்கனிகளையும் படைக்க முடியாது. ஆயினும் இரண்டைக் கொண்டு போய்ப் படைத்துப் பார்ப்போம்" என்று செம்பியன் மனச்சோர்வுடன் கூறிக் கொண்டான்.