உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 245


கோகுக்குவாவின் அறிவார்ந்த திட்டம் கண்டு கீவ் வியப்புமிக்க மகிழச்சி கொண்டான். அவளிடமே தன் கவலைகள் அனைத்தையும், அவற்றைத் தீர்க்கும் பொறுப்பையும் விட்டு விட்டுப் புறப்பட ஏற்பாடானான்.

கோக்குவா அன்றுமுதல் இரண்டு மூன்று நாட்களாக ஆரவாரமாகப் பயணத்துக்குத் திட்டம் செய்தாள். கீவைப்போல அவள் புட்டிச்சாத்தனைத் தொட அஞ்சவில்லை. தேவைக்கு வேண்டிய பணத்தைக் கீவைத் தூண்டிப் புட்டிச்சாத்தன் மூலம் தருவித்து, தன் செல்வத்தை எல்லாரும் காணும்படி பகட்டாகச் செலவு செய்தாள். தாகிதி செல்லச் சில நாள் பிடித்தது. அங்கே பிரிட்டிஷ் தூதர் அலுவலக மாளிகைக்கெதிரே ஒரு மாடி வீடு எடுத்துக்கொண்டு இதே முறையில் ஆரவாரமாக வாழ்ந்தார்கள்.

அவர்கள் செல்வத்தைக் கண்டு வியந்து பொறாமைப் பட்டவர்களிடையே நேரம் பார்த்து இருவரும் தனித்தனியாகப் புட்டிச்சாத்தன் ஆற்றல் பற்றிப் பேச்செடுத்தார்கள். அதை வாங்கியவர்களுக்கு இத்தனை செல்வமும் ‘இம்’ மெனுமுன் எளிதாகக் கிடைக்கும் என்று ஆவல் ஊட்டினார்கள். ஆனால் தானாகப் பழுக்க வேண்டிய பழத்தைக் கல்லிப் பழுக்க வைத்த கதையாகவே அவர்கள் முயற்சி இருந்தது. புட்டிச் சாத்தனைப் பற்றிய பேச்சுக் கேட்டவர்களெல்லாம் ஒன்று அதை நம்பாதவர்களாயிருந்தனர்; அல்லது அதனால் வரும் நலங்களைவிடத் தீங்குகளையே பெரிதாக எண்ணி அஞ்சியவர்களாக இருந்தார்கள். நாளடைவில் புட்டிச்சாத்தன் தொல்லைக் கஞ்சி எவரும் அவர்களுடன் நெருங்காமல் விலகத் தொடங்கினர்.

சீவ், கோக்குவா ஆகிய இருவர் காதல்வாழ்வில் மீட்டும் தனித்தனி துயர், வாய்பேசா எண்ண நிழல்கள் படர்ந்தன. புட்டிச்சாத்தனைப் பற்றிய கவலை ஒன்றே இருவர் உள்ளத்திலும் இருந்தது, அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் உருக்கிற்று. பல இரவுகளில் ஒருவர் தூங்குவதாக மற்றவர் எண்ணிக்கொண்டு. இருவருமே துயிலொழித்திருந்தனர். ஒருவேளை இருவரில் ஒருவர் சற்று அயர்ந்தால்கூட, விழிக்கும்போது மற்றவர் கண்ணீர் பெருக்கி வீங்கிய முகத்துடன் தூங்காமல் இருப்பதையே கண்டனர்.