உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 231

இவ்வுண்மையை இதுவரை அறியவில்லை; இப்போது நேரடியாகத் தன் வாழ்விலேயே உணர்ந்தான்.

கலைவண்ண மாளிகைக்கு உரியவன் என்ற முறையில் அவனுக்கு எங்கும் மதிப்புத் தரப்பட்டது. ஆனால், எவருக்கும் தன்னிடத்தில் அன்பு இல்லை என்பதை அவன் கண்டான். அவனை மணம்செய்து அந்த வீட்டில் வாழ விரும்பாத பெண் இல்லை. ஆனால், தன் வீட்டை விரும்பித் தன்னை மணக்கும் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்க அவன் உள்ளம் ஒப்பவில்லை. அத்தகைய எந்தப் பெண்ணையும் அவனால் காதலிக்கவும் முடியவில்லை.

ஏழைகளுக்கு இன்னல்களிடையே மின்னொளிபோலக் கிட்டும் காதல், செல்வருக்கும் செல்வ வேட்கை உடையவர்களுக்கும் கிட்டுவது அரிது என்ற உண்மையை அவன் இப்போது உணர்ந்தான். உணர்ந்து தன் செல்வத்தையே வெறுத்தான்.

தன் வீட்டையும் தன் செல்வத்தையும் தன் பெயரையும் முற்றிலும் மறைத்து ஏழ்மையின் போர்வை போர்த்துக்கொண்டே, காதலைத் தேடிச்செல்ல அவன் எண்ணங் கொண்டான்.

இந்நிலையில் ஒருநாள் பழைய நண்பன் லோப்பாக்கா அவனைப் பார்க்க வந்தான். கீவும், தான் இடையில் அவனிடம் நன்றிகெட்டதனமாக நடந்ததை எண்ணிவருந்தி, அன்புடன் முகமன் கூறி வரவேற்றான். லோப்பாக்காவும் நண்பனின் புதுவாழ்வின் உயர்நிலையில் குறுக்கிட்டு எதுவும் சொல்லாமல், வேறு பேச்சுகளே பேசியிருந்தான்.

“உன் விருப்பங்கள் யாவும் நிறைவேறி விட்டனவா? நீ இன்பமாக இருக்கிறாயா?” என்று கேட்டான் லோப்பாக்கா.

கீவ், “நான் எதிர்பார்த்ததெல்லாம் கிடைத்து விட்டது.எதிர் பார்த்தற்குப் பதின்மடங்கு கிடைத்ததுவிட்டது. இனி எனக்கு இந்தப் புட்டிப்பேயால் ஆக வேண்டியது எதுவுமே கிடையாது. முன்பு அதை உனக்குத் தரமாட்டேன் என்றேன். இப்போது உனக்கோ அல்லது வேறு யாருக்கோ விருப்பமானால் அதை நான் கொடுக்கத் தடையில்லை. ஆனால், யார் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அதை நான் இனிப் பயன்படுத்தப் போவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டேன்.” என்றான்.