(170) ||
அப்பாத்துரையம் - 46
இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்றால் ஆல்பிரடுக்கும் வில்லியமுக்கும் கிடைத்திருக்கக்கூடிய விலையேறிய கையெழுத்துப்படிகள் கூடக் கிடைத்திருக்க முடியாது. ஏனெனில் உலகில் எழுத்தே கண்டுபிடிக்கப்படாம லிருந்தது. முதலெழுத்தும் முதல் புத்தகமும் வானத்திலிருந்து வந்தவை என அந்நாளைய மக்கள் நம்பினர். நாம் இன்று அங்ஙனம் நம்புவதில்லை. ஆனாலும் அவர்கள் அன்று அதை நம்பியதில் வியப்பொன்றும் இருக்க வேண்டியதில்லை. அது அவ்வளவு அருமையான நிகழ்ச்சியே என்பதில் ஐயம் வேண்டாம். ஏனெனில் அப்பழைய நாள் முதல் இன்றுவரை எத்தனையோ ஆசிரியர்களால் எழுதப்படும் நூறாயிரக்கணக்கான நூல்கள் யாவும் அம் முதலேட்டிலிருந்து, அதனைத் தொகுத்து விரித்துப் பகுத்தும் அதனை, முதலடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டவைகளே. அம் முதல் நூலில்லாவிட்டால் இன்றைய மனித நாகரிகமும் இல்லையாதல் வேண்டும்!
எந்த நல்ல புத்தகத்தையும் நிலத்தில் எறியாதே. ஆழ்ந்து உள்ளார்வத்துடன் சிந்திக்காமல் விளையாட்டாகக் கையாடாதே. ஏனெனில் உன் வாழ்வையும் உன் தலைமுறையின் வாழ்வையும் கடந்து நிலைபெறும் உண்மைகள் அதில் அடங்கியுள்ளன. அதன் தாளும் மையும் அவை பழைய மூலப் பொருள்களுக்குக் கிட்டாத உயர் வாழ்வைப் பெற்றுள்ளன. அதுபோல வாசிக்கும் உன்போன்றவர்களையும் கடந்து அதன் கருத்துக்கள் நிலவும், வளர்ச்சியுறும் என்பது உறுதி, உன் பெருமையாவதெல்லாம் அவ் வளர்ச்சியில் பங்கு கொள்வதும், அதுபோன்ற பிற நூல்களை ஆக்குவதும் அல்லது ஆக்க உதவுவதும் அல்லது ஆக்கத்திற்கு ஆதரவு தருவதும்தான். உன் கைக்கு ஒரு புத்தகம் வந்ததென்றால் இயற்கையின் மறை புதையல்களைத் திறந்து காட்டும் திறவு கோல்களுள் ஒன்று உன்னிடம் வந்து சிக்கியுள்ளது என்று பொருள். நீ அதை நன்கு பயன்படுத்தினால், அச் செல்வத்தில் பங்கு பெறலாம். இல்லாவிட்டால் பங்கு பெறுபவர்க்கு உதவி செய்து, நின்று பயனும் இன்பமும் பெறலாம். அதை எறிவது போன்ற அறியாச் செயல் வேறு இருக்க முடியாது. தொடர் வண்டியின் இலவசப் பயணச் சீட்டு ஒன்று உனக்குக் கிடைத்தது என்று வைத்துக்கொள். அதைக் கொண்டு உலகெலாம் சுற்றிப்