198
அப்பாத்துரையம் - 46
யாகும். உன் வாழ்க்கையையே நீ எடுத்துக் கொண்டால், அதில் ஆண்களின் பங்கை ஒதுக்கினாலும் ஒதுக்கி வாழலாம்; பெண்களின் பங்கை ஒதுக்கி வாழ்தல் முடியாது என்பதை நீ காணலாம். உன்னை மனித இனத்துள் ஒருவனாகச் செய்த பெருமை ஒரு பெண்ணுக்கே உரியது நீ அவரைத் தாய் என்ற தெய்வீகப் பெயரால் அழைக்கிறாய். அவரை நீ தெய்வம் என்று கூறுவதுகூடத் தெய்வத்தைப் பெருமைப் படுத்துவதேயன்றி அவரைப் பெருமைப்படுத்துவ தாகாது. ஏனெனில் கடவுள் அன்புக்கே தாயின் அன்புதான் மேற்கோள் காட்டும் உவமை ஆகும். உன் வாழ்வின் போக்குக்கு உன் உடல்நலம், உன் அறிவுநலம், உன் உணர்ச்சி நலம், உன் ஒழுக்கம் ஆகிய இத்தனை துறையினுக்கும் உன் தாய் எவ்வளவு தொலை பொறுப்புடையவர் என்பதனை நீ அறியாதவனல்ல. ஆனால் நீயும் சரி, எவரும் சரி, அதனை முற்ற அளந்தறிதல் கூடாதது. கற்பனை கடந்ததாகக் கொள்ளப்படும் கடவுள் அன்புக்கே அது அக் காரணத்தால் தான் அருளாளரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டது.
தாய்க்கு அடுத்துத் தமக்கை தங்கையர் உன் வாழ்க்கைப் போக்கை மாற்ற உதவிய பெண்டிர். இவர்கள் பங்கும் பெரும்பாலும் அளந்தறியப்படாத ஒன்றே. உடன் பிறந்த பெண்டிர் இல்லா ஒருவன் வாழ்க்கையையும் உடன் பிறந்த பெண்டிர் உடையான் வாழ்க்கையினையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெண் உடன்பிறந்தும் வாழ்க்கைக்கு உயர்வு கொடுப்பவள் என்பது விளங்கும். தாய், மனைவி ஆகிய இரு பெண்மைத் தொடர்பும் கிட்டத்தட்ட எல்லாருக்கும் உண்டு. ஆகவே அவர்கள் செம்மைப் பண்பு முற்றிலும் எதிர்மறையாகக் காணப்படுவது குறைவு. ஆனால் உடன்பிறந்த பெண்டிர், பெண்மக்கள் ஆகியவர்கள் தொடர்பால் ஒருவன் உயர்பண்பு பெறுவதை எளிதில் காணலாம்.
இறுதியாகக் கவனிக்கப்பட வேண்டியது மனைவியர் தொடர்பு. மனைவியரை நடுநாயகமாகக் கொண்டே எல்லா மனித உறவுகளும், எல்லா வாழ்க்கைப் பயன்களும் அமைந் துள்ளன என்று கூறுவது மிகையாகாது.