உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அப்பாத்துரையம் - 36

தொலைதூரம் சென்று விழுந்தது. ரஸ்டமும் வீசிய வேகத்தில் மண்ணைக் கௌவி விழுந்தான்.

தந்தை கொன்ற மகன்

மாசற்ற உயர் வீரனாகிய ஸோராப், போர்க் கருவியற்று விழுந்த அவனைத் தாக்க விரும்பாமல், அவன் எழும் வரை காத்திருந்தான். ஆனால், எழுந்ததும் ரஸ்டம் தன் நீண்ட கதையைச் சுழற்றிக் கொண்டு தன் போர்க் குரலை எழுப்பி, 'ரஸ்டம், ரஸ்டம்' என்று முழக்கிக் கொண்டு அவன் மீது பாய்ந்தான். இயற்கையிலேயே ஐயத்தால் அலுப்புண்ட அவ்விளைஞன், அப்பெயரைக் கேட்டதுமே “ஆ!” என்றலறிக் கொண்டு வாளையும் வேலையும் கை நழுவவிட்டு நின்றான். ரஸ்டமும் நல்ல வீரனேயாயினும் சிறுவனொருவன் தன் வீரத்துக்கு மாசுவரச் செய்கிறான் என்ற சின மிகுதியால் தன்னை மறந்து விட்டானாதலால், அவன் வெறுங்கையனாக நிற்பதுகூடக் கருதாது தடியால் அடித்து வீழ்த்தினான். ஸோராப் “ஆ! என் தாயே! ஆ என் கண்காணாத் தந்தையாகிய ரஸ்டமே! நான் உயிரிழந்தேன், உயிரிழந்தேன்" என்று புலம்பிக் கொண்டு வீழ்ந்தான்.

ரஸ்டத்தின் கலக்கம்

அம்மொழிகள் கேட்டு ரஸ்டம் திடுக்கிட்டான். அச்சிறுவனது பல கூற்றுகளும் அப்போது அவன் மனத்திற் புகுந்து பேரையப் புயல்களை எழுப்பின. ஆயினும், தனக்கு மகனில்லையே! பிறந்த ஒரு குழந்தையும்தான் பெண்ணாயிற்றே! என்று மனத்துட் கொண்டு ஸோராபை நோக்கி, "சிறுவனே, நீ என்ன மதிமயக்கமான மொழிகளைப் பகர்கிறாய். உன் தாய் யார்! தந்தை யார்?” என்றான்.

ஸோராப், “வீரனே! என் தாய் தஃமீனா என்ற குரடநாட்டு இளவரசி; தந்தையோ உலகின் ஒப்பற்ற வீரனாகிய ரஸ்டம். என்னைக் கொன்று - அதுவும் போர்முறை தவறிக் கொன்று ரஸ்டத்தின் தீராப்பழியைக் கொண்டாய்; உனக்கு இரங்குகிறேன்," என்றான்.