உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

அப்பாத்துரையம் – 37

வயோலா:என்னாயிற்று, ஒன்றும் ஆகவில்லை. அவள் தன் காதலை யாரிடமும் வெளியிட்டுக் கூறினாளில்லை. அரும் பினுள்ளிருந்து அதனை அழிக்கும் புழுப்போல அவள்நெஞ்சகத்தே அது கிடந்து, அவள் இளமை நலனை அரித்துத்தின்றது. அவள் பெருமூச்சு விடுவாள்; ஆனால் வாய்விட்டு ஒரு மொழியும் பேசாள். அவள் பொறுமையே உருவாக நின்று துயரமாகிய தெய்வத்திற்குத் தன்னை இரையாக்கினாள்.

ஆர்ஸினோ இப்பேச்சைத் தொடர்ந்து வேறு கேள்வி கேட்குமுன் ஒலிவியாவிடம் தூதாக அனுப்பப்பட்ட ஒருவன் வந்தான். “ஐய, அவளை நேரில் பார்க்கக்கூடவில்லை. தோழி வாயிலாக அவள் தந்த விடை இது: 'என் தமையன் இறந்து ஏழு ஆண்டு செல்லும்வரை காற்று, வெயில் முதலியவற்றின் முகத்தில் கூட விழிப்பதில்லை என்று நான் நோன்பு கொண்டுள்ளேன். அத்தமையனது நினைவைத் தூண்டிவரும் இவ்வீட்டை அதுவரை எனது கண்ணீரால் கழுவி வர எண்ணமுடையேன்!' இது அவளது மாறா உறுதியாம்?” என்று அவன் கூறினான்.

இம்மொழிகளைக் கேட்டதும் ஆர்ஸினோ, “ஆ, என்ன பெண்மை! அண்ணனுக்கு இத்தனை அன்பு செலுத்துகின்றவள், மாரன் கணை மட்டும் அவள் நெஞ்சிற் பாய்ந்து நோய் செய்வதாயின், அந்நோய்க்கு மருந்தாய் வருந் தலைவனிடம் எவ்வளவு அன்பு கொள்ள மாட்டாள்!" என ஒலிவியாவைப் புகழ்ந்தான்.

அதன்பின் அவன் வயோலாவைப் பார்த்து, “என் அருமை ஸெஸாரியோ, என் உள்ளத்தின் உட்கிடக்கை முற்றும் ஒளியாது உனக்கு உரைத்துவிட்டேன். ஆகவே, நீ என் நட்பினை ஒரு பொருட்டாகக் கொண்டு ஒலிவியாவினிடம் செல்வாய்; சென்று, அவள் உனக்கு உட்செல்ல இணக்கமளிக்க வில்லையாயினும், விடாப்பிடியாய் இங்கேயே வேரிட்டு நிலைத்து விடுவேன் என்று முரண்டி, என் காதற்பிணிக்கு மருந்து பெற்று வருவாய்” என்றான்.

வயோலா: அரசே! தங்களுக்காக நான் செய்யத் தகாத தொன்றுமில்லை. ஆயினும், இவ்வகையில் நான் செய்யக் கூடியதென்ன? தாங்கள் சொல்வது போலப் பிடிமுரண்டாயிருந்து உட்செல்ல இணக்கமே வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம்; அப்பொழுதுதான் என்ன ஆய்விட்டது?