சேக்சுபியர் கதைகள் - 2
199
வயோலா, இனி நிற்பது பயனற்றதெனக் கருதித் திரும்பலானாள். ஆனால், ஒலிவியாவுக்கு அவன் போவது தன் உயிர் போவது போன்றிருந்தது. உள்ளே ததும்பி நின்ற காதலால் தூண்டப் பெற்ற குறிப்புடன், அவள் ஆர்ஸினோவுக்கு மறுப்புக் கூறும் மொழிகளோடு அவளுக்கு அழைப்பும் மறைவாகத் தந்தாள்.
4. மாரன் விளையாட்டுகள்
அவன் போனபின் ஒலிவியா மீண்டும் மீண்டும் “என் குடி நற்குடியே; நீ காணும் நிலையினும் உயரியதே; நான் ஒரு நன்மகன்” என்ற மொழிகளைத் தனக்குள் சொல்லிச் சொல்லி நினைவில் ஆழ்ந்துவிடலானாள். திடீரெனச் சில சமயம், “ஆம், அவர் உயர் குடியினர் என்பதற்கு ஐயமிருக்க முடியாது. அவர் பேச்சு, அவர் தோற்றம், அவர் சாயல், அவர் நடை, அவர் செயல் ஆகிய யாவும் அவர் ஒரு நன்மகனே என்பதை எடுத்துக் காட்டுகின்றன" என்பாள். 'இந்த அரசர் என்னைக் காதலிப்பதில் எத்தனை யிலொரு பங்கேனும் இவர் என்னைக் காதலிக்கக்கூடாதா’ என்பாள். சில சமயம் 'ஆ! அவர் நிலைமையை ஆய்ந்தோய்ந்து பாராது இப்படிக் காதல் வெள்ளத்துள் குதித்து விட்டேனே’ என்று நினைப்பாள். ஆனால், அப்படியும் இப்படியும் அலையும் அவள் உள்ள நினைவுகள் அனைத்தும் 'ஸெஸாரியோ' என்ற வயோலாவின் ஆண் உருவைச் சுற்றியே வட்டமிட்டன.
வழியில்லா இடத்தும் காதல் வழி செய்யும் இயல்பினதன்றோ? எனவே, அவள் பொறுமையிழந்தாள். பெண்களுக்கியற்கையான நாணம் துறந்து, தனக்கும் தான் கருதிய இளைஞனுக்கும் உள்ள உயர்வு தாழ்வையும் பொருட்படுத்தாது, நேரடியாக ஸெஸாரியோவுக்குத் தன் காதலை அறிவிக்கத் துணிந்தாள். அதன்படி ஒரு பணிப்பெண்ணிடம் ஒரு வைரக் கணையாழியைக் கொடுத்து, 'இஃது ஆர்ஸினோவுடையது; இப்போது வந்த இளைஞர் இதனை மறைவாக இங்கே போட்டுவிட்டுப் போயிருக்கிறார். 'இத்தகைய கைத்திறன் இங்கே வேண்டா; இதனை உம் தலைவருக்கே கொடுத்து விடும்' என்று சொல்லி இதனை அவரிடமே கொடுத்துவிடு' என்று கூறி அனுப்பினாள்.
"