உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம்

திரட்டிக் குடி மயக்கத்திலும், துயில் மயக்கத்திலும், தம்மை மறந்திருந்த அந்தோணியின் படைவீரர் மீது பாய்ந்தான். கொஞ்ச நேரத்திற்குள் அந்தோணியின் படை இருந்த இடம் தெரியாது அழிந்தொழிந்தது. எஞ்சில சில வீரரும், அந்தோணியும், கிளியோப்பாத்ராவும் அரும்பாடுபட்டுத் தப்பியோடித் தம் அரண்மனை வந்து சேர்ந்தனர்.

6. முடிவு

வீரருள்ளும் துணைத்தலைவருள்ளும் பலர் இன்னும் அந்தோணியை நீங்காது பின்தொடர்ந்து வந்தனர். செத்தாலும் அவனுடன் சாவதைவிடத் தமக்கு உயர்ந்த பேறு வேறில்லை என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்தோணி தன்னால் இதுவரை அவர்கள் கெட்டது போதும் என்று நினைத்துத் தன் பொருட்குவையனைத்தும், துணிமணியனைத்தும் அவர்கட்கே கொடுத்து "இவையனைத்தும் உங்கள் வெற்றியால் வந்த பொருள்களே. என் அறியாமையால் இழந்தவை போக மீதத்தையேனும் உங்களிடம் சேர்க்கிறேன். எடுத்துக்கொண்டு நச்சுமரமாகிய என்னை விட்டகல்வீர்! எனக்கு நீங்கள் செய்யும் கடமையை எனது விருப்பத்தினும் எத்தனையோ மடங்கு நீங்கள் செய்து தீர்த்து விட்டபடியால் இனி உங்களிடம் எத்தகைய கடமையையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் பெயர் சொல்வதே இனித் தீங்கு விளைவிக்குமாதலால் அதனை மறந்து காலத்திற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டிய தெல்லாம் என் நண்பர்களாகிய உங்கள் நல்வாழ்வே" என்றான்.

தன் வெற்றி நாள் முழுமையும் காதலுக்காக உயிரைப் பலியிட்ட இப்பெருந்த தகையாளன், தோல்வியிலும் நட்பிற் காகத் தன்னைப் பலியிடுவதைக் கண்டு வீரனைவரும் கண்ணீ ருகுத்தனர். அவனை விட்டுச்செல்ல அவர்கள் எவரும் விரும்ப வில்லையாயினும் அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதன் பேரில் ஒவ்வொருவரும் பிரியா விடை பெற்றுக் கால் முன்னும் மனம் பின்னும் இழுக்க அவனை விட்டுச் சென்றனர்.

அக்டேவியஸ் ஸீஸர் இப்போது உலகப் பேரரசனாக விளங்கினான். எகிப்தும் அவன் காலடியில் பட்டுவிட்டது.