உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

173

யுடன் அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே யிருந்தான்.

கடைசியில் அவன் ஒரு நல்லறிவனிடம் சென்று அறிவுரை கோரினான். அதேனே இறைவியின் திருக்கோயில் சென்று இரவு முற்றும் விழித்திருந்து வழிபாடாற்றி அத்தெய்வத்தின் அருளுதவியை நாடும்படி அவன் கூறினான். பெல்லராஃவான் அவ்வண்ணமே சென்று வழிபாடாற்றினான். ஓரிரவு கழிந்தும் தயங்காது அடுத்த இரவும், அதற்கடுத்த இரவும் இருந்து கடுவிழிப்புடன் இடைவிடா வழிபாடியற்றினான். மூன்றாம் நாளிரவு அவன் கண்கள் அவனைமீறித் துயில் கொண்டன. அது கண்டு அதேனே இரங்கி அவனுக்குத் துயிலில் காட்சியளித்தாள். அவள் கையில் பொன்னாலான கடிவாளம் ஒன்று இருந்தது. அதை அவனிடம் நீட்டிக்கொண்டே அவள், "பெல்லராஃவான்! உன் அன்புறுதிக்கு உன்னை மெச்சினேன். இதோ இந்தப் பொற்கடிவாளம் உனக்கு உதவும், போ!” என்றாள்.

பெல்லராஃவான் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பெகாஸஸ் ஓடையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் மெல்லக் குதிரையை அணுகி, பொற்கடி வாளத்தை அதன் தலைமீது வீசினான். கடிவாளத்தில் அழகொளியில் மயங்கிப் பெகாஸஸ் அசையாது நின்றது. கடிவாளத்தைப் பூட்டியதும் அவன் சட்டென்று அதன்மீது தாவி ஏறினான்.இப்போது பெகாஸுஸுக்குத் தன்னுணர்வு வந்துவிட்டது. அது சீற்றமும் வீறும்கொண்டு வானில் எழுந்து பறந்தது. குட்டிக்கரணங்களிட்டுத் தன்மீது ஏறிய பெல்லராஃவானைக் கீழே தள்ள முயற்சி செய்தது. ஆனால், எவராலும் அணுக முடியாத குதிரையை ஒரு தடவை அணுகி ஏறியபின்பு, அவன் கடிவாளத்தின் பிடியை விடாமலும், குதிரைமீது அணைத்த தன்கால்களை நெகிழ விடாமலும் கெட்டியாக உட்கார்ந்து கொண்டான். குதிரை எத்தனை குட்டிக்கரணங்களிட்டும், மனிதனும் அதனுடன் குட்டிக்கரணமிட்டதன்றி வேறெவ்வகை யிலும் அசையவில்லை, தன்னாலியன்றமட்டும் தள்ளிவிட முயன்றும் பயனில்லாததால், பெகாஸஸ் இறுதியில் பெல்லாராஃவானைச் சுமந்து காடும் மலையும் கடலும் தாண்டி உலகெங்கும் சுற்றித் திரிந்தது.