உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

அப்பாத்துரையம் – 40

அருவியில் விழுந்தான். இடி முழக்கத்தோடும், நுரைத்துப் பொங்கும் அலைகளோடும், கடுவேகத்தில் செல்லும் அந்த ஆற்று வெள்ளம், வேலனைக் கீழே கீழே இழுத்தோடியது.

தங்கக் கவரிமானுக்குச் சினம் பொறுக்க முடியவில்லை. தன்னைக் காயப்படுத்திய அக்கொடியவனைத் தன் கொம்பு நுனியால் குத்திக் கிழித்து, அவன் குருதி வெள்ளத்தில் தன் கொம்பைக் கழுவி உலர்த்த வேண்டும் என்ற தன் எண்ணம் ஈடேறாது போனதால், அது சினம் மூண்டு ஓடியது. அனல் வீசும் பெருமூச்சுடன் அது கீழே, மக்கள் வாழ்ந்த அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. தங்கள் தலைவனுக்குத் துணையாக அதன் படைகளாகிய மான் கூட்டங்களும் பாய்ந்து வந்தன. மாயமானைத் தொடர்ந்து, மலைப் பூதங்களும் வந்தன. தங்கக் கவரிமானின் தணியாச் சினத்தினால், அங்குள்ள பொருள்கள் எல்லாம் பற்றி எரிந்து அழிந்தன. பேருக்கு ஒரு குடிசையோ, அடையாளத்துக்கு ஒரு மரமோ கூட இல்லாமல் அந்த வட்டாரம் அவ்வளவும் பொடி சாம்பலாய் விட்டது.

இது நடந்து எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ஏழாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே அந்த மான் அழித்த பாழ் நிலத்தில் பச்சை மரம் தளிர்க்கும் என்று வழிவழி வழக்காகக் கூறப்பட்டு வருகிறது.ஆனால், அப்படி முதல் முதல் தளிர்க்கும் மரத்தைக் கொண்டு செய்யப்படும் தொட்டிலில் படுக்கும் முதல் குழந்தைக்கு, நந்திக் கொம்பின் தங்கக் கவரிமானை மேய்க்கும் காவல் பெண்களான மூன்று வானமகளிரும், அந்த மானைப் பிடிக்கும் வழியைச் சொல்லிக் கொடுப்பார்கள். மேலும், அந்த மலைக்குகையில், பச்சை உடை உடுத்துப் பவளமணி முடியணிந்து, என்றும் இமைக்காது கண் விழித்து நிற்கும் கூளிகள் காவல் புரிந்து வருகிற அந்த அழியாப் பெருநிதியை அடைவதற்கும் அவர்கள் வழி கூறுவார்கள்.