உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

(223

மேடு; உயிரைப் பணயமாக வைத்து நடக்கும் அந்த ஓட்டப் பந்தயம் குலை நடுக்கந் தரத்தக்கதாக இருந்தது.

மானும், மனிதனும் எதிரியின் உயிரை வாங்கி விடுவதென்ற ஒரே நோக்கத்தோடு இப்படி விரட்டி நிற்கும்போது, திடுமென வந்த கருமுகில்கள் மலையுச்சியைக் கவிந்து கொண்டன; காற்றும் கனத்தது; கடும்புயல் வீசும்போலிருந்தது. ஒரு நொடிநேரம் மாயமான் வேலனின் திகைத்த கண்ணுக்குத் தெரியாது மறைந்தது. மறு நொடியில், மேகப்படலம் சற்றே விலகியதும், அந்தக் கவரிமான் கல்வீச்சுத் தூரத்தில் நிற்பது தெரிந்தது. உயிருக்கு உலைவைக்கும் அதன் அழகுதான் எப்படி இருந்தது! வெண்ணெய் போன்ற அதன் வெண்கவரிதான் என்ன! கள்ளிப்பூவின் ஊட்டத்தால் மேலும் கனத்துத் திரண்டு நின்று தீ உமிழும் கொம்புதான் என்ன! வடுவுற்றறியாத தன் எழில் வடிவில், கூர் அம்பை எய்து குருதிபாயச் செய்த கொலைஞனைக் கொன்றே தீர்த்துவிட வேண்டும் என்ற துணிவுடனும், அடங்காத சினத்துடனும் உறுத்து நோக்கும் அதன் கனல் கக்கும் கண் பார்வைதான் என்ன!

அந்தப் பார்வை வேலனின் வயிற்றைக் கலக்கிவிட்டது. யாரும் வந்தறியாத அந்த உச்சி மலையில், தான் தன்னந்தனியாக நிற்பதையும், தன் குறிக்குத் தப்பி விட்ட தங்கக் கவரிமான் தன் வாள் முனைக் கொம்பால் தன்னைக் குத்திக் கொல்லப் பாய்ந்து வருவதையும், தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தின் கொடுமையையும் அவன் அப்போதுதான் உணரத் தொடங்கினான். தன் காலடியில் இருப்பதோ படுபாதாளப் பள்ளம். அதன் கீழே கரைகளைக் கிழித்துக்கொண்டு பாயும் காட்டாறு. தன் உயிருக்குக் கூற்றுவனாக வாய்த்துள்ள அம் மான் கொம்பின் ஒளி, வேலனின் கண்ணைப் பறித்துப் பார்வையைக் கவர்ந்தது; தன் தனிமைநிலை பற்றிய ஏக்க உணர்ச்சி சிந்தையைக் கலக்கியது; மாயமானின் கொலை நோக்கு, அவன் நெஞ்சு உரத்தை அழித்தது; என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாது வேலன் விரைந்து ஓடினான்; அது பிசகாது ஓடவேண்டும் என்பதையும் மறந்தான். அந்தோ! பித்துப் பிடித்தவன்போல் பாய்ந்தோடிய வேலன் கால் இடறினான். செங்குத்தான அந்தப் பனி மலையிலிருந்து கீழே அதள பாதாளத்தில் ஓடும் காட்டாற்று