உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

||

1. முன்னுரை

இளைஞர்கட்குத் தம் வாழ்க்கைப் பயிற்சியின் உதவி கொண்டு அறிவுரையும் எச்சரிக்கையும் தருவது முதுமையின் கடமை. வருகின்ற தலைமுறையாளருக்குத் தம் வாழ்க்கைப் படிப்பினைகளைத் தந்து அவர்கள் வாழ்க்கையினைத் தம் வாழ்வினும் வளம்படுத்துவது முந்திய தலைமுறையினர் பொறுப்பு. வாழ்க்கையின் அறிவு, தோல்விகளின் பயனாகவும், துன்பங்களின் பயனாகவும், நேரச் செலவு, ஆற்றல் செலவு ஆகியவற்றின் பயனாகவும் கிடைப்பது. மனிதன் தான் அடைந்த தோல்வியையே மீண்டும் அடைந்து, விழுந்த குழியிலேயே மீண்டும் விழ வேண்டும் என்பதில்லை. அந்த நிலையிலேயே மனிதன் இருந்தால் மனித நாகரிகம் விலங்கு நிலையிலேயே இருந்திருக்கும்.

ஒருவர் வாழ்க்கையில் என்றுமே தோல்விகள் வரமாட்டா என்றில்லை. தோல்விகள் என்றும் வரக்கூடியவையே. ஆனால், வந்த தோல்வியே மீண்டும் வருவது அறிவு வளர்ச்சிக்குரிய நிகழ்ச்சி ஆகாது. தோல்வியால் பெற்ற படிப்பினை அதே தோல்வி மீண்டும் வராமல் தடுப்பதேயாகும். புதிய தோல்விகள் ஏற்படுமானால், அவை புதிய அறிவுக்கே வழி வகுக்க வேண்டும். எனவே, பல இன்னல்கள் அடைந்து மனிதன் பெற்ற அறிவை அவன் தன் எதிர்காலத்துக்கும், தன் வருங்காலத் தலைமுறை யினருக்கும் வாய்மொழி மூலமோ, நிலையான எழுத்து வடிவு மூலமோ தெரிவித்தல் நாகரிக சமூகத்துக்கு இன்றியமையாத தொன்று.

வாழ்க்கை ஓர் எல்லையற்ற கடல்; அதில் இன்ன சமயமென்றில்லாது பெரும் புயல்களும், மலைபோன்ற அலைகளும், ஆழ்சுழிகளும் எழக்கூடும்.நீர்த்திரைகளுள் மறைந்து