18
அப்பாத்துரையம் - 43
உறையுள்களின்மை ஆகிய தீங்குகளாகவும் வந்து விடிகின்றன. இன்னும் இவ்வகையினரிற் சற்று குறைபட்டவரும், அவர்கள் நிலையிலிருந்து சற்று வழுவியவருமே வாணிக உலகிலும் புகுந்து, வாணிகக்கழகப்பங்குகளிலும் பிற துறைகளிலும் சூதாட்டங்களைப் பெருக்கி, அதன் மூலம் பலரைக் கெடுத்துச் சிலரை உயர்த்தி மீண்டும் இழந்த உயர்பதவி பெற முயல்கின்றனர். இவற்றில் அழிந்த பல்லோர் உலகின் வாழ்க்கைப் பரப்பில் தென்படாது மூழ்கிச் செல்பவர் ஆகின்றனர். வெற்றிபெற்ற சிலரோ மீண்டும் அரசியலாதரவு பெற்றுப் பெருமக்களினம் சார்கின்றனர்.
வெற்றிபெறும் சிறுபான்மையோரைக் கண்டு மருட்சியுற்ற பொதுமக்கள் தீயில் விழும் புற்றீசல்கள் போல் இச்சூதாட்ட வகையில் தம் கையுறைச் சில் பொருள்களையும் கொண்டு கொட்டுகின்றனர். உழைப்பவர் உழைப்பை அழித்து, உழையாதவர்களை மேலும் ஊக்கி, நாட்டைக் கெடுக்கும் இத் தீய பழக்க வழக்கங்களுக்கு இன்னும் அரசியல் ஆக்கந்தருவது என்பது,நாட்டின் நீங்காக் களங்கமேயாகும்.
மீதூணை யாவரும் கண்டிப்பர்; பெருங்குடியையும் எவரும் கண்டிக்காதிரார். ஆனால் மட்டான உணவைப் போலவே, மட்டான குடியும் தீமையற்றதெனப் பலர் கொள்ளுவதுண்டு. குடியென்பது இங்கே நீர் அல்லது சூழ்நிலைத் தட்பவெப்பத்துக்கு, அல்லது உடல் நிலைக்கேற்ப வெந்நீரின் குடி எனக்கொள்ளப் பட்டால், தவறில்லை. சுவைமிக்க பால், மோர் போல உணவோடு உணவான குடிகளாயினும் தவறில்லை. ஆனால் இன்றைய நாகரிக உலகில் கள்ளும் கடுந்தேறலும் (brandy, beer, etc) இன்தேறலும் (wine whisky), பிற கொடிய குடிவகைகளும், சிறு வெறிக்குடிவகைகளும் (coffee, tea) இந்நீர்க் குடிகள் போதாமல் புகையிலை யூறல், சுருட்டு ஆகியவற்றின் புகைக்குடிகளும் இன்றியமையாப் பொருள்களாய் விட்டன.
குடிவகைகளால் உடல் நலக்கேடு மட்டுமல்ல; பொருட் செலவும் பிறதேவைகளுக்கு மேற்பட்டதாய், அவற்றின் செலவையும் பயனையும் கெடுப்பதாயுள்ளது.பிற பொருள்களின் தேவை மிகுதிப்பட மிகுதிப்பட விலை குறைவதும், இவற்றில் மட்டும் தேவை மிகுதிப்படுந்தோறும் விலை மிகுவதும் பொருளியல் வரலாற்றுக் கண்கொண்டு நோக்கினால்