உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(240)

அப்பாத்துரையம் - 43

வாய்மையின் மெய்யொளியை நீ காண வேண்டு மானால், உன் சமயமே மெய்ச் சமயம், உன் கருத்தே மெய்க்கருத்து, உன் நலமே ஒரு தனிநலம் என்று குறுகிய தனிமதிப்பெண்ணங்களை விட்டுவிடு. கடவுளும் வாய்மை யும் அறிவுக்கெட்டாதன. எளிதில் உணரப்படாதன என்று காட்ட, ஆய்வுரை வாதச் சிக்கல்களை வளர்த்து அவற்றில் அமிழ்ந்து இறுமாப்புக் கொள்ளாதே. அறச்சிந்தனை என்னும் நெய்த்திரி மீது உன் அறிவு ஒளிபெறட்டும்.

பழிபாவம் என்பவைகள் புறச் செயல்களில்தான் இருக்கின்றன என்று எண்ணாதே. அவற்றின் பெரும்பகுதி, வேர்ப்பகுதி முற்றிலும் புறச்செயலில் பழி நீக்குவதைக் குறியாகக் கொண்ட பலர் புறத்துறவு மேற்கொண்டு அவல முறுகின்றனர். இது பழிபாவத்தின் தழைகுளையாகிய சிறுசினைகளைக் குறைத்து அதன் அடிமரத்தையும் வேரையும் பெருக்கும் செயலாகவே முடியக்கூடும். ஆடையணியை விலக்குவதனால், ஒருவன் பகட்டார வாரத்தை விலக்கியவன் ஆகமாட்டான். உரையை விட்டதனால், அவன் அவாக்களை ஒழித்தவன் ஆகமாட்டான். வீடு குடிவிட்டு விலகிக் காட்டில் உறைவதனால், அவன் தன்முனைப்புக் குறைந்து விடாது. புறச்செயலும் சின்னமும் அகப்பண்பை வளர்ப்பவை அல்ல, அதன் வளர்ச்சி தளர்ச்சிகளைக் காட்டி எச்சரிப்பவை. புறவிலக்குச் செய்தபின் இவ்வெச்சரிக்கை அற்று விடவே, அகப்பண்புகள் உள் முதிர்வடைந்து முற்றிவிடுகின்றன. புறத்துறவு இங்ஙனம் புறத்தே துறவாகி அகத்தே தீமை வளர்க்கும் நச்சுப்பண்பாகி விடுகிறது.

புறஉலகிலேயே புற உலகப் பற்றற்று அக உலகின் நிறை அமைதியில் நிலவுதலே மனிதனின் முழுநிறை இன்ப அமைதி ஆகும். அது தோலா நிறைவேற்றி, அதுவே வாய்மையின் குன்றேறி நின்று நிலவும் குளிர்நிலவொளி.

நெறியடுத்தனை; நீடிய வெறுப்பொடு துயரம் தறிப்படுத்தனை; தகையிலா ஐம்புலக் கள்ளர் மறிபடுத்தனை; மாசுக ளனைத்தின் வேர் அகற்றிக் குறியடுத்தனை; கொள்கையில் நின்றனை குறியாய்!