உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

37

வாழ்க்கைச் செயலளவில் குறைத்து விடுகிறது. பலவகை வாழ்க்கைத் தரங்களை உடைய பல சமூகங்களிலும், தொழில் உழைப்பாளர் கூலித்தரம் அவ்வவ் வாழ்க்கைத் தரத்துக்குரிய பிழைப்பூதியமாயமைந்து விடுகிற தென்றும், அதற்குமேல் அது உயர்வதில்லை என்றும் முதலாளித்துவ அறிஞரே ஆராய்ந்து கண்டுள்ளனர். அத்துடன் குறைந்த வாழ்க்கைத் தரமுள்ள சமுதாயத்தில் கூலி குறைந்து தொழிற்செலவும் குறைந்துவிடு கிறது. முதலாளித்துவப் போட்டியில் இப்பகுதியே வெற்றி பெறுவது உறுதி. எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் குறைந்த வாழ்க்கைத் தரமுடைய சமுதாயமே வெற்றிபெற முடியும். தொழிலாளர் உலகிலும் குறைந்த கூலியே போட்டியில் வெற்றியடைந்து உயர்ந்த கூலியை ஒழித்து விடுகிறது.

இங்ஙனம் தொழிலாளியின் நாள் உழைப்பின் செலவே அவன் நாள் உழைப்பின் விலைமதிப்பாகிவிடுகிறது.இவ்வுழைப்பு மதிப்பே தொழிலின் பிற மதிப்புக்களுடன் சேர்ந்து சரக்கின் மதிப்பாகிறது. ஆனால் சரக்கின் விலையைக் கூறுபாடு செய்துபார்த்தால் இப் பொருள் மதிப்புகளும் உழைப்பு மதிப்புக்களும் போக மற்றொரு கூறும் காணப்படும். இதுவே தொழில் முதலாளிக்கு ஆதாயமாக, அவனிடம் படிப்படியாகத் தங்கிச் சேர்ந்து அவன் முதலீட்டைப் பெருக்கிச் சேர்க்கும் பகுதியாக அமைகிறது. இம்மதிப்பை நாம் மிகைமதிப்பு'

என்னலாம்.

கூலியும் மிகைமதிப்பும்

உழைப்புக்கு உரியவன் தொழிலாளி. முதலீட்டுக்கு உரியவர் முதலாளி. சரக்கின் மதிப்பில் உழைப்புக்குரிய மதிப்பைத் தனியாகக் கணக்கிட்டு விட்டோம். இது தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. மூலப்பொருள், கருவி ஆகியவற்றின் செலவின் ஒரு கூறு தேய்மானமாகக் கணக்கிடப்பட்டு விட்டது. அது முதலுக்குரியவனான முதலாளியிடம் சேர்ந்து, அவற்றை வாங்க அவன் செலவிட்ட தொகையின் பகுதிக்கு ஈடாகிவிட்டது. இவை போக மீந்த மிகைமதிப்பு எத்துறை சார்ந்தது? யாருக்கு உரியது? அது முதலீடு சார்ந்து முதலாளிக்குரியதா? உழைப்புச் சார்ந்து தொழிலாளிக்குரியதா?