உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

131

பிதுக்குதல் எனப்படும். பிதுக்குதலில் வெறுமையாகப் பிதுக்கி இன்புறுவதும் உண்டு. உள்ளதைப் பறிப்பதற்காகப் பிதுக்கித் துன்பூட்டுவதும் உண்டு. அந்நிலைகளில் பிதுக்குதல் துன்புப் பொருளதாம்.

பிய்த்தெடுத்தல் - பறித்தல்

வாழைத் தாரில் இருந்து சீப்பையும், சீப்பில் இருந்து பழத்தையும் பிய்த்து எடுப்பது நடை முறை. பழத்தைப் பிய்ப்பதுபோல உள்ளதைப் பறித்துக் கொள்ளலும் பிய்த் தெடுத்தலாயிற்று. "பிச்சுக் கொடு கொடு எனத் தின்பான் என்பது பாரதியார் பாவின் ஓரடி.

தலையைப் பிய்த்துக் கொள்ளுதல் என்பதொரு வழக்குத் தொடர். கவலைப்படுதல் என்பது அதன் பொருள். அது தலையைக் கோதும்போது முடி சிக்குப் பட்டுப் பிய்க்கும் துன்பம் வழியாகத் துன்பப் பொருளும், சிக்கல் நீங்காது பறித்துக் கொண்டு வருதலால் பறித்தல் பொருளும் ஒருங்கு பெறுவ தாயிற்று. பலமுறை அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்டலும் பிய்த்தெடுத்தலே.

பின்பாட்டுப்பாடுதல் - ஒத்துப் பேசுதல்

முன்பாட்டின் போக்குக்கு ஏற்பப் பின்பாட்டுப் பாடுதலே பொருந்திய இசையாகும். அஃது இசைத்துறை நடைமுறை. இவண் முன்பாட்டு என்பத முதற்கண் பாடுபவரைக் குறியாமல் முதற்கண் ஒரு செய்தியைக் கூறுவாரைக் குறிக்கிறது. பின்பாட்டு என்பது முதற்கண் செய்தியைக் கூறுபவர் குறிப்புக்குத் தகத் தகப் பின்னே பேசுவாரைக் குறித்தது. “ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி அணைத்துப் புளுகடா அயலூர்க் கோடாங்கி” என்னும் பழமொழிக்கு ஒப்ப ஒட்டியும் அணைத்தும் பேசுவது பின்பாட்டும் முன்பாட்டுமாம்.

பின்னுதல் - தொடுத்துக் கூறுதல்; வலுவாக அடித்தல்

ஒரு செய்தியைச் சொல்லி அதனைத் தொடர்ந்து, அவனைத் தொடர்ந்து தொடராகச் செய்தி அல்லது கதை கூறுவது பின்னுதல் எனப்படும், பன்னுதலும் பலகாலும் சொல்வதேனும் அதில் தொடர்புறுதல் இல்லை. பின்னுதல் தொடர்புறு செய்தியாக அமையும், “பின்னி எடுத்துவிட்டான் பின்னி” என்பதில் கடுமையாக அடித்தல் பொருள் உண்டு. ஒரு செய்தியை ஒருவர் சொல்லும்போது அவருக்குத்தோதான

·