உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

இனி, சில தெய்வ வேறுபாட்டினாலும் கொள்கை மாறு பாட்டினாலும், சொராத்திரியரின் முன்னோர் பகைமை கொண்டே பிரிந்து போனதாகத் தெரிகின்றது. செந்து அவெத்தாவிற் கூறப் பட்டுள்ள அஹூர மஸ்தா இருக்கு வேதத்திற் குறிக்கப்படவில்லை. சொராத்திரியர் அசுரரை நல்லவராகவும் தேவரைத் தீயவராகவுங் கொண்டனர். இந்திய ஆரியர் கருத்து இதற்கு முரணானது.

பாரதக் காலம்

(தோரா. கி.மு. 1100-1000)

பீடுமன் பரசுராமனிடம் விற்கலை பயின்றவன் என்று சொல்லப்படுவதால், பாரதக்காலம் இராமாயணக் காலத்திற்கு இரு தலைமுறையே பிற்பட்டதாகும்.

பாண்டவரும் கௌரவரும் திங்கள் மரபைச் சேர்ந்தவர். வடநாட்டுத் திங்கள் மரபு, பாண்டியன் கங்கைக்கண் நிறுவிய படிநிகராளி வழியினதே. பாண்டவரின் முன்னோர் புதன் (அறிவன்), புரூரவன், ஆயு, நகுடன், யயாதி, பூரு, துடியந்தன், பரதன், அத்தி, குரு, சந்தனு, பீடுமன், விசித்திரவீரியன், திருதராட்டிரன், பாண்டு என்போர். பீடுமன் கௌரவ பாண்ட வரின் பாட்டனும், திருதராட்டிர பாண்டுவர் அவரின் தந்தைமாரு மாவர்.

பாரதக் காலத்திற் பெயர்பெற்றவனும் பாரதப் போரை இயக் கியவனும் கண்ணன் ஆவன். அவன் தென்னாட்டு ஆயர் மரபுப்படி, கோசல நாட்டரசன் மகள் சத்தியை என்னும் நப்பின்னையை ஏழ் ஏறுதழுவி மணந்தான். அவன் மதுராவில் ஆண்டுகொண்டிருந்த போது, காலயவனன் என்பவன் பெரு மிலேச்சப் படையுடன் வந்து அந் நகரை முற்றுகையிட்டான். அதை முன்னரே அறிந்த கண்ணன், குசராத்தின் மேற்கில் அரபிக்கடலிலுள்ள ஒரு தீவில் துவாரகை (துவரை) என்னும் நகரை யமைத்து, அதற்குத் தன் தலைநகரை மாற்றிக்கொண்டான்.

யவனம் என்பது கிரேக்க நாட்டிற்கொரு பெயர். யவனன் கிரேக்கன். சின்ன ஆசியாவிலும் கிரேக்க நாடுகளிருந்தமையால், அவற்றை யடுத்து வாழ்ந்த அரபியர்க்கும் அவரையொத்த மூர் வகுப் பாரான வடஆப்பிரிக்கர்க்கும் அப் பெயர் வழங்கிற்று. அதனால், உண்மையான கிரேக்கரை வெள்ளை யவனர் என்றும், அரபியரும் மூராருமான சோனகரைக் காலயவனர் என்றும், நிறம்பற்றி வேறுபடுத்திக் கூறியதாகத் தெரிகின்றது.காலம்=கருப்பு.‘சுன்னத்து’ என்னும் வழக்கம்பற்றிச் சோனகர் எனப் பெயர் பெற்றனர் போலும்! மிலேச்சர் = பெலுச்சியர். பெலுச்சியர் நாடே பின்னர்ப் பெலுச்சித் தானம் (Baluchistan) எனப்பட்டது.