உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

முகில்

வேறெங்கும் நீரில்லை; ஓடித் தேடிப் பார்த்தும் ஓரிடத்தும் நீர் கிடைக்கவில்லை; மழை பெய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. வான் வறளத் தானும் வறள்கிறது நிலம்! ஈரம் உலர உலர எரிச்சல் மிகப் பெறுகின்றது தரை! ஊன்ற முடியாக் கொடுமை மான் கால்களுக்கு; தாங்க முடியா வெம்மை முதுகுக்கு இதயத்தில் ஈரம் இருக்கிறது; நாவில் ஈரம் சிறிதும் ல்லை! என்ன செய்யும் மான்?

அஞ்சி அஞ்சித் திரிந்த நிலைமை அகன்றது; ஆற்றல் சிறிது சிறிதாக வளர்ந்தது; நீரின் கொடிய வேட்கை துணிவு ஊட்டியது; தன் உயிரைக் காக்க எண்ணிய எண்ணம் உயிரைப் போக்கத் திரியும் செந்நாயையும் பொருட்டாக எண்ணாத நிலைக்குத் தள்ளியது. நாயின் நாவினின்றொழுகும் நீரை நக்கிக் குடித்தேனும் ஈரப்பசை உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறது அப்படியே செந்நாய் வடிக்கும் நீரை நக்குகிறது. அந்நீர் குடிக்கத் தக்கதா? மான் குடித்துப் பழக்கம் பெற்றதா? விளைவு என்ன? மானுக்கு நீர் விக்குகிறது!

இக்காட்சி கற்பனையானது தான். வெம்மைக் கொடுமையை விளக்கும் கற்பனை இது. கலிங்கத்துப் பரணி என்னும் கலை மணம் கமழும் நூலில் இக்கற்பனை இடம் பெற்றுள்ளது.