உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

55

வேண்டியவர் ஆனால் என்ன; வேண்டாதவர் ஆனால் என்ன; வேற்றுமை காட்டுமா அளவில்?

ஆள்வோர் ஆனால் என்ன; அவர் அடி நின்றார் என்றால் என்ன; இரு திறமாகக் காட்டுமா?

உயர்ந்த பொருள் என்றால் என்ன; தாழ்ந்த பொருள் என்றால் என்ன; நீர்ப் பொருள் என்றால் என்ன; திடப் பொருள் ஆனால் தான் என்ன; வேற்றுமையுண்டா?

கோல்களில் தனிச் சிறப்புடையது எது?

தூக்குகின்றவரைப் பற்றியும், வாங்குபவர் கொடுப்பவர் பற்றியும், தன் கண் வைத்த பொருள் பற்றியும் ஏற்ற மாற்றம் காட்டாமல் உள்ளது உள்ளவாறே ஒட்பமுறக் காட்டும் உயர்வுடைமை துலாக் கோலுக்குத் தானே உண்டு. சமனாக முதற்கண் நின்று வைக்கப் பெற்ற பொருளுக்கு ஏற்ப உயர்ந்து தாழ்ந்து ‘நாவால்' முறை வழங்கும் சிறப்பு வேறு எக் கோலுக்கும் ல்லையே!

இத்தகைய கோலின் சிறப்பு வெளிப்பட எவ்வாறு கூறலாம்? முதற்கண் சமனிலையில் நிற்கின்றது; பின் உள்ளது உள்ளவாறு செம்மையுறச் சீர்தூக்கும் கோல்" என்பது சாலப் பொருந்தும்.

சமன் செய்து சீர்தூக்கும் கோல் நமக்கு வற்புறுத்திக் கொண்டிருப்பது என்ன?

"மாந்தர்களே விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையுடன் வாழுங்கள்” எனக் காட்டி வற்புறுத்துகின்றது.

வாங்குவதற்கு என்றும் விற்பதற்கு என்றும் வெவ்வேறு அளவைகள் நிறைகோல்கள் சிறு வணிகரும் பெரு வணிகரும் வைத்திருக்கக் காண்கிறோம். வேறு வேறு அளவைகள் நிறை கோல்கள் வைத்திராதவர்களும் அளப்பதிலும் நிறுப்பதிலும் ‘கைவரிசை' காட்டி வஞ்சம் செய்வதைக் காண்கிறோம். “உனக்கு என்றும் பிறருக்கு என்றும் வேற்றுமை காட்டாதே; கரவு செய்யாதே; என்னியல்பை உற்றுப்பார்!" என்று தராசு- துலாக்கோல்—தன் நாவால் பல்லாயிர முறைகள் எடுத்துக் காட்டி நின்றும் வணிகர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. எண்ணிப் பார்ப்பவர் ஓரிருவர் உளராயின் அவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி! ஏனையோர் நிலைமை என்ன?

தன்னலங் காரணத்தால் பொது நலத்தைக் கொன்று புதைக்கின்றனர்; அல்லது சுட்டு எரிக்கின்றனர். இவர்களைப்