12. குருட்டு நீதிபதி
'கோல்' என்பதற்குச் செம்மையான ஆட்சி என்னும் பொருள் உண்டு. ஆட்சியில் செம்மை காப்போம் என்னும் உறுதிப் பாட்டை உலகுக்கு உணர்த்துவதற்காக அரசர்கள் ஒருகோல் வைத்திருந்தனர். அதுவே செங்கோல் என்று அழைக்கப் பெற்றது. இன்னுஞ் சிலர் கைகளிலே 'செங்கோல்' வைத்திருந்தாலும்கூட ஆட்சியிலே செம்மை காக்காமல் கொடுமை கொண்டு ஒழுகியது உண்டு. அவர்கள் கோல் கொடுங்கோல்' என்று தூற்றப் பெற்றது. "கொடுங்கோல் வேந்தர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று' என்று கருதப் பெற்றதும் உண்டு. கோலொடு நின்று குற்றம் புரிந்து வாழுதல் வேலோடு நின்று வெறுக்கும் செயல் புரிதலுக்கு இணையாக அறிஞர்களால் சுட்டப் பெற்றதும் உண்டு.
நேர்மைக்கு அளவாக இருந்த கோல், நீட்டி அளக்கவும் பயன்படுத்தப் பெற்றது ஆயிற்று. அப்படி ஆயினவே முழக் கோல், கசக்கோல் என்பவை. அடிக்குச்சி என்பதும் இவற்றின் விளைவு!
இனி, நிறுத்து எடைகாணும் கருவியும் 'கோல்' என்று பெயர் ஏற்றது. அதனை ‘நிறைகோல்' என்பர். துலாம் அளவு நிறுத்து எடுக்கும் நிறுவைக் கோலினைத் துலாக்கோல் என்று அழைத்தனர் முன்னோர். எடைப்படி இல்லாமல் அக்கோலில் உள்ள வரைகளைக் கொண்டே நூறு பலம் வரை நிறுக்கும் வாய்ப்பு துலாக்கோலின் சிறப்புடைமையாம். துலாக் கோலை வெள்ளிப் பூண் பிடித்து வைத்திருந்தோர் 'வெள்ளிக் கோல்' என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தனர். பின்னாளைத் தராசுக்கு முன்னோடியாக இருந்தது துலாக்கோலேயாம்.
இவற்றால் நேர்மை ஆகட்டும், நீளம் ஆகட்டும், நிறுவை ஆகட்டும் அளவினைத் திட்டமிட்டுக் காட்டும் ஒன்றே கோல் என்பதன் பொருளாதல் உறுதியாகின்றது.
கோலின் சிறப்பியல்போ எண்ணி எண்ணி வியக்கத்
தக்கதாம்.