திருக்குறள் கட்டுரைகள்
69
கல்லாதவன் சாலையில் மலங்கழிக்கிறான்; கற்றவனும் அப்படியே செய்கின்றான்.
கல்லாதவன் வாய்க்குவந்த சொற்களை யெல்லாம் சொல்கிறான்; அவனுக்குத் தாழாமல் கற்றவனும் பேசுகின்றான்.
கல்லாதவன் வஞ்சம், சூது, பொய், களவு இவற்றில் நிலைக்கிறான்; அவனிலும் தந்திரமாக, மிகமிக நுட்பமாகப் பன்னூறு மடங்கு வஞ்சம், சூது, பொய், களவு, கையூட்டு, கள்ளக் கணக்கு முதலாய கயமைகளையே கால்களாகக் கொண்டு பேய்நடை போடுகின்றான்.
வந்ததோர்வேற்றுமை என்ன? இதனை நினைக்கும் போதுதான், தாயுமானவர் மொழிந்தது எவ்வளவு உண்மை என்று புலப்படுகின்றது.
“கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாதஎன்
கர்மத்தை என்சொல்வேன் மதியைஎன்சொல்லுவேன்”
பலகற்றல் நல்லது; இயலாவிடில் சில கற்றாலும் போதும்; உலக நடையை உற்று அறிந்து ஒட்டி ஒழுகுதல் வேண்டும். இவ்வாறு அமைந்தோரே கற்றார்; பிறர் எல்லாம் கல்லார்; அறிவும் இல்லார்; அனைத்தும் இல்லார்!
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்”